கடலூர் மாவட்டம் முழுவதும் பலத்த மழை அதிகபட்சமாக புவனகிரியில் 10.5 செ.மீ. பதிவானது

கடலூர் மாவட்டம் முழுவதும் நேற்று பலத்த மழை பெய்தது. இதில் அதிகபட்சமாக புவனகிரியில் 10.5 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.;

Update:2020-12-19 20:38 IST
கடலூர்,

தமிழகத்தில் கடந்த அக்டோபர் 28-ந் தேதி தொடங்கிய வடகிழக்கு பருவமழை தற்போது மீண்டும் தீவிரம் அடைந்து இருக்கிறது. மேலும் நிவர் மற்றும் புரெவி புயல்கள் காரணமாக கடலூர் மாவட்டத்தில் கனமழை கொட்டி தீர்த்தது. இதனால் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் உள்ள குடியிருப்புகளை மழைநீர் சூழ்ந்தது. இந்த நிலையில் கடந்த ஒரு வாரத்துக்கு மேலாக மழை ஓய்ந்து, வறண்ட வானிலை நிலவியது. இதனால் குடியிருப்புகளை சூழ்ந்திருந்த மழைநீர் வடிய தொடங்கியது.

இந்த நிலையில் வளிமண்டலத்தில் நிலவிய மேலடுக்கு சுழற்சி காரணமாக கடந்த 2 நாட்களாக மாவட்டம் முழுவதும் மழை வெளுத்து வாங்கியது. இதனால் மழைநீர் வடிய தொடங்கிய குடியிருப்பு பகுதிகளில் மீண்டும் மழைநீர் தேங்கியது. இதற்கிடையே நேற்று முன்தினம் மதியம் முதல் நேற்று காலை வரை மழை பெய்யவில்லை.

இதனால் குடியிருப்பு பகுதிகளில் தேங்கிய மழைநீரை அதிகாரிகள் வெளியேற்றும் பணியில் ஈடுபட்டனர். இந்த நிலையில் குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள இலங்கை கடற்பகுதியில் வளிமண்டலத்தில் மேலடுக்கு சுழற்சி நிலவி வருவதன் காரணமாக தென் மாவட்டங்கள் மற்றும் வட கடலோர மாவட்டங்களில் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது.

இதற்கிடையே நேற்று காலை 9 மணி அளவில் கடும் வெயில் சுட்டெரித்தது. ஆனால் காலை 10 மணிக்கு திடீரென வானில் கருமேகங்கள் திரண்டு சாரல் மழை பெய்ய தொடங்கியது.

இந்த மழை மதியம் 12 மணி வரை தூறிக்கொண்டே இருந்தது. இந்நிலையில் 12 மணிக்கு பிறகு கனமழை கொட்டியது. இந்த மழை சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நீடித்தது. அதன் பிறகு மழை பெய்யாமல் வெயில் அடிக்க தொடங்கியது.

இந்த மழையால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. மேலும் ஏற்கனவே தேங்கியிருந்த குடியிருப்பு பகுதிகளில் மீண்டும் அதிகளவில் தண்ணீர் தேங்கியது. இதனால் கடலூர் தானம்நகர், புருஷோத்தமன் நகர், வண்ணான்குட்டை, நவநீதம் நகர் உள்ளிட்ட தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.

இதேபோல் காட்டுமன்னார்கோவில் பகுதியில் பெய்த கனமழையால் சுற்று வட்டார கிராமங்களில் உள்ள குடியிருப்புகளை மழைநீர் சூழ்ந்துள்ளது. இதனை அந்தந்த ஊராட்சி நிர்வாகத்தினர் வெளியேற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இருப்பினும் பல இடங்களில் வடிகால் வாய்க்கால் இல்லாததால் மழைநீரை வடிய வைக்கும் பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதேபோல் சிதம்பரம், விருத்தாசலம், பண்ருட்டி, புவனகிரி, சேத்தியாத்தோப்பு, பரங்கிப்பேட்டை மற்றும் மாவட்டம் முழுவதும் நேற்று பலத்த மழை பெய்தது. இதில் அதிகபட்சமாக புவனகிரியில் 10.5 செ.மீ. மழையும், குறைந்தபட்சமாக குப்பநத்தத்தில் 1.2 மில்லி மீட்டரும் பதிவாகியுள்ளது.

மாவட்டத்தின் பிற இடங்களில் நேற்று முன்தினம் காலை 8.30 மணி முதல் நேற்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் பெய்த மழை அளவு விவரம் மில்லி மீட்டரில் வருமாறு:-

பரங்கிப்பேட்டை -67.2

காட்டுமன்னார்கோவில் -55

சிதம்பரம் -36.8

லால்பேட்டை -32

சேத்தியாத்தோப்பு -26.4

அண்ணாமலைநகர் -26.2

கொத்தவாச்சேரி -21

வானமாதேவி -16

பண்ருட்டி -8

ஸ்ரீமுஷ்ணம் -7.1

வேப்பூர் -5

லக்கூர் -3.4

பெலாந்துரை -3.2

கடலூர் -2.4

குறிஞ்சிப்பாடி -2

மேலும் செய்திகள்