செஞ்சியில் துணிகர சம்பவம்: ஆசிரியை வீட்டுக்குள் புகுந்து 35 பவுன் நகைகள் கொள்ளை - கத்தியை காட்டி மிரட்டி மர்மநபர்கள் கைவரிசை
செஞ்சியில் ஆசிரியை வீட்டுக்குள் புகுந்து கத்தியை காட்டி மிரட்டி 35 பவுன் நகைகளை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
செஞ்சி,
விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் உள்ள விழுப்புரம் சாலை விநாயகபுரத்தை சேர்ந்தவர் சகாயராஜ்(வயது 53). இவர் தொண்டு நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றி வருகிறார். இவருடைய மனைவி வசந்தி. இவர் அரசு பள்ளி ஆசிரியை ஆவார். இவருடைய மாடி வீட்டில் தனியார் பள்ளி முதல்வர் சார்லட்(58) என்பவர் வசித்து வருகிறார்.
நேற்று முன்தினம் இரவு சகாயராஜ், தனது மனைவி வசந்தி, மகள் சரண்யா ஜெசி(15), மகன் ஹர்ஷா ஆண்ட்ரோ(5), மாமனார் சூசைநாதன் ஆகியோருடன் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்தார்.
இந்த நிலையில் நள்ளிரவு 12 மணியளவில் வீட்டின் மேல் மாடியின் கதவை மர்மநபர்கள் தட்டியுள்ளனர். நீண்ட நேரம் ஆகியும் கதவு திறக்கப்படவில்லை. இதையடுத்து அவர்கள், கீழே இறங்கி வந்துள்ளனர். இந்த சத்தம் கேட்டு சகாயராஜ், வெளியே வந்துள்ளார். அப்போது வீட்டின் வெளியே முகமூடி அணிந்தபடி நின்று கொண்டிருந்த 5 மர்மநபர்கள், திடீரென தாங்கள் வைத்திருந்த கத்தியை காட்டி சகாயராஜை மிரட்டியுள்ளனர்.
இதில் செய்வதறியாது திகைத்து நின்ற அவரை மர்மநபர்கள் வீட்டுக்குள் அழைத்து சென்றனர். பின்னர் அவர்கள், சகாயராஜ், அவருடைய மனைவி, குழந்தைகள் அணிந்திருந்த நகைகளை கத்தி முனையில் பறித்தனர். மேலும் வீட்டில் பீரோவில் இருந்த நகைகளையும் கொள்ளையடித்தனர். இவற்றின் மொத்த மதிப்பு 35 பவுன் இருக்கும் என்று கூறப்படுகிறது. மேலும் 1 கிலோ வெள்ளிப்பொருட்கள், ரூ.10 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றையும் அவர்கள் எடுத்துக்கொண்டனர்.
இதையடுத்து சகாயராஜ் குடும்பத்தினரை, வீட்டுக்குள் வைத்து பூட்டிவிட்டு மர்மநபர்கள் அங்கிருந்து தப்பி சென்றனர். பின்னர் சகாயராஜ், மாடியில் இருந்த சார்லட்டை செல்போன் மூலம் தொடர்பு கொண்டு கதவை திறக்குமாறு கூறியுள்ளார். இதையடுத்து அவர் விரைந்து வந்து கதவை திறந்து சகாயராஜ் குடும்பத்தினரை மீட்டார்.
பின்னர் இதுகுறித்து செஞ்சி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் செஞ்சி துணை போலீஸ் சூப்பிரண்டு இளங்கோ, இன்ஸ்பெக்டர் அன்பரசு ஆகியோர் விரைந்து வந்து சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். கொள்ளை போன நகை, பணத்தின் மதிப்பு ரூ.15 லட்சம் இருக்கும் என்று கூறப்படுகிறது.
இதற்கிடையே விழுப்புரத்தில் இருந்து மோப்பநாய் சாய்னா வரவழைக்கப்பட்டது. அது வீட்டில் இருந்து மோப்பம் பிடித்தபடி சிறிது தூரம் ஓடிச்சென்று நின்றது. ஆனால் யாரையும் கவ்விப்பிடிக்கவில்லை. விழுப்புரத்தில் இருந்து கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு, வீட்டில் பதிவாகியிருந்த தடயங்களை சேகரித்து சென்றனர். மேலும் இந்த சம்பவம் பற்றி அறிந்த விழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராதாகிருஷ்ணன் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து வீட்டை பார்வையிட்டதோடு, சகாயராஜ் மற்றும் அவரது குடும்பத்தினரிடம் விசாரணை நடத்தினார்.
இதுகுறித்து செஞ்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து நகை-பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். ஆசிரியை குடும்பத்தினரை கத்தியை காட்டி மிரட்டி நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.