பால தடுப்புச்சுவரில் இருந்து வாய்க்காலில் தவறி விழுந்த தொழிலாளி தண்ணீரில் மூழ்கி பலி - குடிப்பழக்கத்தை மறக்க கோவிலில் கயிறு கட்ட வந்த இடத்தில் பரிதாபம்

குடிப்பழக்கத்தை மறக்க கோவிலில் கயிறு கட்ட வந்த இடத்தில், பால தடுப்புச்சுவரில் இருந்து தவறி வாய்க்காலில் விழுந்த தொழிலாளி தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தார்.

Update: 2020-12-19 12:48 GMT
ஆண்டிமடம்,

அரியலூர் மாவட்டம் ஆண்டிமடத்தை அடுத்த ராங்கியம் பஸ் நிறுத்தம் அருகே உள்ள வாய்க்காலில் ஒரு ஆண் இறந்த நிலையில் கிடந்ததை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்தனர். உடனடியாக இது பற்றி ஆண்டிமடம் போலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், ஆண் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.

இதில், இறந்தவர் தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் வலையப்பேட்டை கற்பகம் காலனி தெருவை சேர்ந்த அங்கண்ணன்(வயது 59) என்பது தெரியவந்தது. இவர் தாராசுரத்தில் உள்ள காய்கறி மார்க்கெட்டில் மூட்டை தூக்கும் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். இவருடைய மனைவி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இவர்களுக்கு குழந்தைகள் இல்லை.

மனைவி இறந்த கவலையில் அங்கண்ணன், மது குடிக்கும் பழக்கத்துக்கு அடிமையானார். இந்நிலையில் அவர், மது குடிக்கும் பழக்கத்தை மறப்பதற்காக அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் அருகே ராங்கியம் கிராமத்தில் உள்ள காளி கோவிலுக்கு கயிறு கட்டுவதற்காக நேற்று முன்தினம் வந்துள்ளார். ராங்கியம் பஸ் நிறுத்தம் அருகில் உள்ள பால தடுப்பு சுவரில் அமர்ந்திருந்தபோது, தவறி வாய்க்காலில் விழுந்து தண்ணீரில் மூழ்கி இறந்துள்ளார் என்பது தெரியவந்தது. இது குறித்து அங்கண்ணனின் உறவினர் சுப்பையன் ஆண்டிமடம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் செய்திகள்