திருச்சியில் பட்டாக்கத்தியால் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய 6 பேர் கைது
திருச்சியில் பட்டா கத்தியால் கேக்வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய 6 பேர் கைது செய்யப்பட்டனர்.;
திருச்சி,
தற்போது கொரோனா வைரஸ் நோய் தொற்று காரணமாக தமிழக அரசு பிறப்பித்துள்ள தடை உத்தரவை மீறி சட்டவிரோதமாக ஆயுதத்துடன் ஒன்றுகூடியும், மற்ற நபர்களுக்கு கொரோனா நோய் பரவும் வகையிலும் திருச்சியை சேர்ந்த வாலிபர் ஒருவர் தனது பிறந்த நாளை நண்பர்களுடன் சேர்ந்து பட்டாக்கத்தியால் கேக் வெட்டி கொண்டாடி இருக்கிறார். இதுசம்பந்தமான வீடியோ வாட்ஸ்-அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.
இது குறித்து கண்டோன்மெண்ட் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில், திருச்சி அல்லித்துரை, ஸ்ரீரங்கம் பகுதியை சேர்ந்த வாலிபர்கள் நேற்று முன்தினம் நள்ளிரவில் திருச்சி அரிஸ்டோ மேம்பாலத்தில் நண்பர்களுடன் சேர்ந்து பட்டாக்கத்தியால் கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாடியது தெரியவந்தது.
இதையடுத்து அல்லித்துறை சாந்தபுரம் பகுதியை சேர்ந்த கோபிநாத் (வயது 22), பசுபதி (22), ரங்ராஜ் (19), சந்தோஷ்குமார் (19), கிருஷ்ணமூர்த்தி(19), ஸ்ரீரங்கம் காந்திநகர் பகுதியை சேர்ந்த கபில்(22), மோகன், ராஜேஷ், ராஜா ஆகிய 9 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். அவர்களிடம் இருந்த 2 பட்டா கத்தியை பறிமுதல் செய்தனர். இதில் கோபிநாத் உள்பட 6 பேரை போலீசார் கைது செய்தனர். தப்பியோடிய மோகன், ராஜேஷ், ராஜா ஆகியோரை தேடிவருகின்றனர்.