அருமனை கிறிஸ்துமஸ் விழாவிற்கு வருகை தரும் முதல்-அமைச்சருக்கு சிறப்பான வரவேற்பு; விழா மைதானத்தை பார்வையிட்டு தளவாய் சுந்தரம் பேட்டி

அருமனை கிறிஸ்துமஸ் விழாவுக்கு வருகை தரும் தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிக்கு குமரி மாவட்ட அ.தி.மு.க. சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்படும் என்று தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய் சுந்தரம் கூறினார்.;

Update: 2020-12-19 06:39 GMT
கிறிஸ்துமஸ் விழா நடைபெறும் மைதானத்தை தளவாய்சுந்தரம் பார்வையிட்ட போது எடுத்த படம்
கிறிஸ்துமஸ் விழா
அருமனையில் வருகிற 22-ந் தேதி நடைபெறும் கிறிஸ்துமஸ் விழாவில் தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு சிறப்புரையாற்றுகிறார். இதையொட்டி விழா மைதானத்தில் நடைபெற்று வரும் முன்னேற்பாடு பணிகளை நேற்று தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய்சுந்தரம் பார்வையிட்டார். தொடர்ந்து விழா தொடர்பாக கிறிஸ்தவ இயக்க நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

பின்னர், அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்த போது கூறியதாவது:-
அ.தி.மு.க. அரசு சிறுபான்மை மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து அவர்களுடைய கோரிக்கைகளை நிறைவேற்ற துறை ரீதியான நடவடிக்கை எடுத்து வருகிறது. கிறிஸ்தவர்களின் புனித ஸ்தலமான ஜெருசலேமுக்கு புனித யாத்திரை செல்ல அனுமதி வழங்கி, நிதியுதவி வழங்கி வருகிறது.

முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா எதிர்கட்சி தலைவராக இருந்த போது அருமனை கிறிஸ்துமஸ் விழாவுக்கு வந்தார். தமிழக அரசு மத நல்லிணக்கத்தின் மீது ஆழ்ந்த நம்பிக்கையும் உறுதிப்பாட்டையும் கொண்டுள்ளது.

எடப்பாடி பழனிசாமி வருகை
அதன் அடிப்படையில் அருமனை கிறிஸ்துமஸ் விழாவில் பங்கேற்க முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இணக்கம் தெரிவித்துள்ளார். அவர் வருகிற 22 -ந் தேதி மதியம் சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடிக்கு வருகிறார். அங்கிருந்து கார் மூலம் நாகர்கோவில் வந்து ஓய்வெடுத்துவிட்டு இரவு 7 மணியளவில் அருமனை கிறிஸ்துமஸ் விழா மேடைக்கு வருகிறார்.

விழாவில், அரசு பள்ளியில் பயின்று 7½ சதவீதம் ஒதுக்கீட்டில் மருத்துவ படிப்பில் சேர்ந்த 12 மாணவர்கள் முதல்-அமைச்சரிடம் ஆசி பெறுகிறார்கள். விழாவில் பங்கெடுத்த பின்பு மீண்டும் சென்னைக்கு செல்கிறார்.

சிறப்பான வரவேற்பு
விழாவில் பங்கேற்க வரும் முதல்-அமைச்சருக்கு குமரி மாவட்ட அ.தி.மு.க. சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்படும். அதற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின்போது அ.தி.மு.க. மாவட்ட அவைத்தலைவர் சிவ குற்றாலம், அருமனை கிறிஸ்தவ இயக்க செயலாளர் ஸ்டீபன், கிறிஸ்தவ இயக்க தலைவர் டென்னிசன், இணைச்செயலாளர் அருள், துணை தலைவர் ஜோஸ்செல்வன், அரசு வக்கீல் அருள் பிரகாஷ் சிங், ஜீன்ஸ் உள்பட பலர் உடனிருந்தனர்.

மேலும் செய்திகள்