27-ந் தேதி முதல் லாரிகள் வேலை நிறுத்த போராட்டம்: தினமும் ரூ.5 ஆயிரம் கோடி வர்த்தகம் பாதிக்கும்; சம்மேளன மாநில தலைவர் குமாரசாமி பேட்டி

வருகிற 27-ந் தேதி முதல் கோரிக்கைளை வலியுறுத்தி 4½ லட்சம் லாரிகள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவதால் தினமும் ரூ.5 ஆயிரம் கோடிக்கு வர்த்தகம் பாதிக்கப்படும் என்று மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளன தலைவர் குமாரசாமி கூறினார்.

Update: 2020-12-19 05:14 GMT
கிருஷ்ணகிரியில் நடந்த கூட்டத்தில் மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளன தலைவர் குமாரசாமி பேசிய போது
ஆலோசனை கூட்டம்
மாநில லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தம் தொடர்பான ஆலோசனை கூட்டம் கிருஷ்ணகிரியில் உள்ள தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்ட பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் சங்க கட்டிடத்தில் நேற்று நடந்தது. இந்த கூட்டத்திற்கு மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளன தலைவர் குமாரசாமி தலைமை தாங்கினார். செயலாளர் வாங்கிலி, பொருளாளர் தன்ராஜ், மாநில துணைத்தலைவர் பரமத்திவேலூர் ராஜூ ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்த கூட்டத்தில் கிருஷ்ணகிரி தலைவர் முருகேசன், செயலாளர் தண்டபாணி, சட்ட ஆலோசகர் ஜெயப்பிரகாஷ், தர்மபுரி தலைவர் நாட்டான்மாது, செயலாளர் அப்சல், துணை தலைவர் தங்கவேல், அரூர் தலைவர் அண்ணாத்துரை, செயலாளர் இளையரசு, பொருளாளர் சண்முகம் மற்றும் கிருஷ்ணகிரி, தர்மபுரி, அரூர், திருப்பத்தூர் பகுதிகளை சேர்ந்த லாரி உரிமையாளர்கள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தை தொடர்ந்து மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளன தலைவர் குமாரசாமி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

வேக கட்டுப்பாட்டு கருவிகள்
மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் சார்பில் தமிழக அரசுக்கு சில கோரிக்கைகளை வைத்து வருகிற 27-ந் தேதி காலை 6 மணி முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளோம். 49 கம்பெனிகள் வேக கட்டுப்பாட்டு கருவிகளை வழங்கி வருகின்றன. அவை மத்திய அரசால் அங்கீகரிக்கப்பட்டவை ஆகும். ஆனால் தமிழக அரசு 12 நிறுவன வேக கட்டுப்பாடு கருவிகளை மட்டுமே பொருத்த வேண்டும் என்று நிர்பந்திக்கிறது. அதேபோல ஒளிரும் பட்டை விவகாரத்தில் 2 கம்பெனிகளில் இருந்து மட்டுமே வாங்க வேண்டும் என நிர்பந்திக்கிறார்கள்.

மாநில அரசு குறிப்பிட்ட நிறுவனங்களில் மட்டும் வாங்க நிர்பந்திக்க கூடாது என தீர்ப்பில் கூறி உள்ளது. தீர்ப்பு வழங்கி 2 மாதங்கள் ஆகிறது. நாங்களும் போக்குவரத்து ஆணையாளரை சந்தித்து மனுக்களை கொடுத்துள்ளோம். ஜி.பி.எஸ். கருவிகளுக்கு 140 கம்பெனிகள் மத்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட நிலையில் மாநில அரசு குறிப்பிட்ட 8 கம்பெனிகளில் மட்டுமே வாங்க வேண்டும் என நிர்பந்திக்கிறார்கள்.

போக்குவரத்து துறை அதிகாரிகள் எங்கள் வாகனங்களை எப்.சி. செய்வதில் மிகப்பெரிய கெடுபிடி காட்டுகிறார்கள். தற்போது மாநிலம் முழுவதும் போக்குவரத்து துறையில் லஞ்ச ஒழிப்பு சோதனை நடந்து வருகிறது. லாரிகள் வேலை நிறுத்த போராட்டத்தால் தினமும் ரூ.5 ஆயிரம் கோடி அளவிற்கு வர்த்தகம் பாதிக்கும். இதில் 4½ லட்சம் கனரக வாகனங்கள் பங்கு கொள்கின்றன.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்