பெரியம்மை நோயால் பாதிக்கப்பட்ட கால்நடைகளை தனிமைப்படுத்த வேண்டும்; வேலூர் கலெக்டர் சண்முகசுந்தரம் பேச்சு
பெரியம்மை நோயால் பாதிக்கப்பட்ட கால்நடைகளை தனிமைப்படுத்தி வைக்கவேண்டும் என்று கலெக்டர் சண்முகசுந்தரம் கூறினார்.
சிறப்பு முகாம்
அணைக்கட்டு தாலுகா வசந்தநடை கிராமத்தில் கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் கால்நடைகளை தாக்கும் பெரியம்மை நோய் தடுப்பு சிறப்பு சிகிச்சை முகாம் நேற்று நடந்தது. முகாமிற்கு மாவட்ட கலெக்டர் சண்முகசுந்தரம் தலைமை தாங்கினார். கால்நடைத்துறை இணை இயக்குனர் நவநீதகிருஷ்ணன் முன்னிலை வகித்தார். உதவி இயக்குனர்கள் அந்துவன், காந்திமதி, ஜெல்சிராஜ், ஆவின் துணை பொது மேலாளர் கோதண்டராமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அணைக்கட்டு தாசில்தார் சரவணமுத்து வரவேற்றார்.
முகாமை தொடக்கிவைத்து கலெக்டர் பேசியதாவது:-
தனிமைப்படுத்த வேண்டும்
பாதிக்கப்பட்ட மாடுகளை பண்ணையில் இருந்து தனிமைப்படுத்தி முடிந்தவரை தனிநபர் மூலம் பராமரிக்க வேண்டும். கால்நடைகளுக்கு பெரியம்மை நோய் பாதிப்பு ஏற்படுவதை தடுக்க மாவட்டம் முழுவதும் முகாம்கள் நடைபெறுகிறது. மாடுகளுக்கு பெரியம்மை நோய் என்பது ஈ, கொசுக்கள், உண்ணிகள் மூலம் பரவக்கூடிய வைரஸ் நோயாகும். பாதிக்கப்பட்ட மாடுகளில் அதிக காய்ச்சல, உடல் முழுவதும் சிறு கட்டிகள, கால்களில் வீக்கம், பால் உற்பத்தி குறைதல், சினையுற்ற மாடுகளின் கருச்சிதைவு போன்ற அறிகுறிகள் காணப்படும். இவ்வாறு காணப்படும் கால்நடைகளை அருகில் உள்ள கால்நடை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளிக்க வேண்டும்.
இவ்வாறு கலெக்டர் பேசினார். ேமலும் விவசாயிகளுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் மற்றும் தாது உப்புக்கலவை பாக்கெட்டுகளை வழங்கினார். முகாமில் கால்நடை மருத்துவர்கள் மோகன்குமார், சுபத்திரா, கால்நடை ஆய்வாளர்கள் விஜயன் மற்றும் ராஜன் ஆகியோர் கலந்து கொண்டனர்.