வேலூர் இந்திய செஞ்சிலுவை சங்க அலுவலகத்துக்கு ‘சீல்'; நிர்வாக குழுவையும் கலைத்து கலெக்டர் அதிரடி

வேலூரில் இந்திய செஞ்சிலுவை சங்க அலுவலகத்துக்கு ‘சீல்’ வைக்கப்பட்டது. நிர்வாக குழுவையும் கலைத்து கலெக்டர் உத்தரவிட்டார்.

Update: 2020-12-19 02:51 GMT
வேலூர் உதவி கலெக்டர் கணேஷ் சோதனை; அண்ணாசாலையில் உள்ள செஞ்சிலுவை அலுவலகத்துக்கு சீல்
ஆய்வுக்கூட்டம்
வேலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இந்திய செஞ்சிலுவை சங்கத்தின் கணக்கு தணிக்கை குறித்த ஆய்வு கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு செஞ்சிலுவை சங்க தலைவரும், மாவட்ட கலெக்டருமான சண்முகசுந்தரம் தலைமை தாங்கினார். கலெக்டரின் நேர்முக உதவியாளர்கள் (கணக்குகள்) குணசேகரி, (பொது) விஜயராகவன் உள்பட அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

இந்த ஆய்வு கூட்டத்தில், இந்திய செஞ்சிலுவை சங்கத்தில் பெறப்படும் நிதி கணக்குகள் ஆய்வு செய்யப்பட்டது. மேலும் கலெக்டருக்கு சங்க நிர்வாகம் தொடர்பாக அதன் நிர்வாகி ஒருவர் மீது பல்வேறு அடுக்கடுக்கான புகார்கள் சென்றதாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து சங்க விவகாரம் குறித்து விசாரணை மேற்கொள்ள வேலூர் உதவி கலெக்டர் கணேசுக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.

செஞ்சிலுவை சங்கத்துக்கு சீல்
அதன்படி உதவி கலெக்டர் கணேஷ், வேலூர் தாசில்தார் ரமேஷ் மற்றும் அதிகாரிகள் வேலூர் அண்ணாசாலையில் உள்ள இந்திய செஞ்சிலுவை சங்க அலுவலகத்திற்கு சென்று திடீரென சோதனை செய்தனர். பின்னர் அலுவலகத்தை பூட்டி ‘சீல்’ வைத்தனர்.

அதைத்தொடர்ந்து சத்துவாச்சாரியில் மாநகராட்சி 2-வது மண்டலம் அருகே உள்ள செஞ்சிலுவை சங்க மருத்துவமனைக்கு உதவி கலெக்டர் சென்றார். அங்கும் அவர் சோதனை செய்தார். அந்த மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வரும் நோயாளிகளின் எண்ணிக்கை உள்ளிட்ட விவரங்களை டாக்டர், செவிலியரிடம் கேட்டறிந்தார். அங்கு பராமரிக்கப்பட்டு வரும் கோப்புகளையும் ஆய்வு செய்தார்.

அறிவிப்பு பலகை அகற்றம்
பின்னர் இக்குழுவினர், சங்கத்தின் கட்டுப்பாட்டிலுள்ள பொய்கையில் செயல்படும் முதியோர் காப்பகத்துக்கு ஆய்வுக்கு சென்றனர். அங்கு உள்ளே செல்ல யாருக்கும் அனுமதி இல்லை என்ற அறிவிப்பு பலகை இருந்தது. அந்த பலகையை அகற்ற உதவி கலெக்டர் உத்தரவிட்டார். உடனடியாக அந்த பலகையும் அகற்றப்பட்டது.

இது தொடர்பாக உதவி கலெக்டர் கணேஷ் கூறுகையில், தணிக்கையின் போது கணக்குகளில் சில முரண்பாடுகள் இருந்தது. எனவே, விசாரணை மேற்கொள்ள கலெக்டர் உத்தரவிட்டார். முழுமையான விசாரணைக்கு பின்னரே அனைத்து தகவலும் தெரியவரும் என்றார்.

வேலூர் உதவி கலெக்டரின் திடீர் சோதனையும், அலுவலகத்துக்கு சீல் வைக்கப்பட்டதும் வேலூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நிர்வாக குழு கலைப்பு
இதுகுறித்து அதிகாரி ஒருவர் கூறுகையில், இந்திய செஞ்சிலுவை சங்க வேலூர் மாவட்ட நிர்வாகி ஒருவர் மீது பிற நிர்வாகிகள் புகார்கள் தெரிவித்தனர். கணக்கு தணிக்கை கூட்டம் முடிவடைந்த பின்னர் உறுப்பினர்கள் பிற பொறுப்பாளர்கள் கலெக்டரை சந்தித்து இந்த புகார்களை தெரிவித்துள்ளனர். இதனால் கலெக்டர் நிர்வாக குழு மீது அதிருப்தி அடைந்துள்ளார். எனவே தற்காலிகமாக இந்த நிர்வாக குழுவை கலைத்துள்ளார். புதிய நிர்வாக குழு அமைக்கப்படும் வரை இதை உதவி கலெக்டர் பொறுப்பு வகிக்கவும் உத்தரவிட்டுள்ளார். எனவே அந்த அலுவலகத்தை யாரும் பயன்படுத்த கூடாது 
என்பதற்காக அலுவலகத்தை மூடி சீல் வைத்துள்ளனர். கணக்கு தணிக்கையில் முரண்பாடுகள் உள்ளதா? என விசாரணை நடத்தி வருகின்றனர் என்றார்.

மேலும் செய்திகள்