கடலாடி அருகே பயங்கரம்: நடத்தையில் சந்தேகத்தால் பெண் படுகொலை; தப்பி ஓடிய கணவருக்கு வலைவீச்சு
நடத்தையில் சந்தேகத்தால் பெண் படுகொலை செய்யப்பட்டார். தப்பி ஓடிய கணவரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
நடத்தையில் சந்தேகம்
ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி அருகே கே.கரிசல்குளம் கிராமத்தை சேர்ந்தவர் குருசாமி. இவருடைய மகன் காளிதாஸ் (வயது 32). இவர் சரக்கு ஆட்டோ டிரைவராக வேலை பார்த்து வருகிறார்.
இவருடைய மனைவி வீரம்மாள்(26). இவர்களுக்கு 4 வயதில் மதுமதி என்ற மகள் இருக்கிறாள்.
காளிதாசுக்கு மது குடிக்கும் பழக்கம் உண்டு. இதனால் போதையில் மனைவி நடத்தையில் சந்தேகம் கொண்டு தகாத வார்த்தைகளை பேசியதாகவும், இதனால் கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.
வெட்டிக்கொலை
இந்த நிைலயில் நேற்று முன்தினம் இரவிலும் கணவன்-மனைவிக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
நேற்று அதிகாலையில் காளிதாஸ், தூங்கி கொண்டிருந்த மனைவியிடம் மீண்டும் தகராறில் ஈடுபட்டு்ள்ளார். பின்னர் ஆத்திரம் அடைந்த அவர், அரிவாளால் வீரம்மாளை சரமாரியாக வெட்டினார்.
இதில் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே அவர் துடிதுடித்து இறந்தார். உடனே காளிதாஸ் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார்.
வலைவீச்சு
இந்த நிலையில் நேற்று காலையில் குழந்தை மதுமதி வீட்டிற்கு முன் அழுது கொண்டே இருந்தாள். இதை பார்த்த அக்கம், பக்கத்தினர் குழந்தைைய அழைத்து கொண்டு வீட்டுக்குள் சென்று பார்த்தனர்.
அங்கே வீரம்மாள் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து உடனடியாக கடலாடி போலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர்.
தகவல் அறிந்ததும் இன்ஸ்பெக்டர் முத்துமீனாட்சி, சப்-இன்ஸ்பெக்டர் கார்த்திகை ராஜா மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். கொலை செய்யப்பட்டு கிடந்த வீரம்மாளின் உடலை பரிசோதனைக்காக கடலாடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தப்பி ஓடிய காளிதாசை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.