9 மாதங்களுக்கு பிறகு ராமேசுவரம் கோவிலில் தங்கப்பல்லக்கில் சாமி உலா

9 மாதங்களுக்கு பிறகு ராமேசுவரம் கோவிலில் தங்கப்பல்லக்கில் சாமி திருவீதி உலா வந்தார்.

Update: 2020-12-19 01:44 GMT
தங்கப்பல்லக்கில் எழுந்தருளிய பர்வதவர்த்தினி; தங்கப் பல்லக்கில் சுவாமி உலா
கொரோனா...
தமிழகம் முழுவதும் உள்ள கோவில்களில் கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கையாக கடந்த மார்ச் மாதம் 23-ந் தேதி முதல் பக்தர்கள் செல்ல தடை விதிக்கப்பட்டிருந்தது. அதன் பின்னர் 5 மாதத்திற்கு பிறகு ராமேசுவரம் கோவில் உள்ளிட்ட தமிழகம் முழுவதும் உள்ள கோவில்களில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்வதற்கு அனுமதிக்கப் பட்டனர்.

அதுபோல் ராமேசுவரம் ராமநாதசாமி கோவிலில் கடந்த 9 மாதங்களாக சாமியை வைத்து வாகனங்களை தூக்கிச் செல்லும் சீர்பாத பணியாளர்கள் யாரும் கோவிலுக்குள் அனுமதிக்கப்படவில்லை. 

வாகனத்திலும் சாமி வைத்து புறப்பாடும் ரத வீதி மற்றும் உள்பிரகாரத்தில் நடைபெறாமல் இருந்து வந்தது.

தங்கப்பல்லக்கில் உலா
ராமேசுவரம் கோவிலில் ஆடி திருக்கல்யாண திருவிழா நாட்கள் மற்றும் மாதம்தோறும் வரும் பிரதோஷ நாளன்று வாகனங்கள் இல்லாமல் அலங்கரிக்கப்பட்ட சாமியை சிறிய மர கேடயத்தில் வைத்து மூன்றாம் பிரகாரத்தை சுற்றி வலம் வரும் நிகழ்ச்சியும் கடந்த 9 மாதமாக நடைபெற்று வந்தது.அதுபோல் ராமேசுவரம் கோவிலின் வாரம் தோறும் வெள்ளிக்கிழமை அன்று தங்கப்பல்லக்கில் அம்பாள் வலம் வரும் நிகழ்ச்சியும் கடந்த 9 மாதமாகவே நடைபெறவில்லை.

இந்தநிலையில் 9 மாதத்திற்கு பிறகு ராமேசுவரம் ராமநாதசாமி கோவிலில் வெள்ளிக்கிழமையான நேற்று இரவு பர்வதவர்த்தினி அம்பாள் சிறப்பு அலங்காரம் செய்து பூஜை செய்யப்பட்டது. அதன்பின்னர் மூன்றாம் பிரகாரத்தின் மையப்பகுதியில் வைக்கப்பட்டிருந்த தங்க பல்லக்கில் எழுந்தருளினார்.. தொடர்ந்து 20-க்கும் மேற்பட்ட சீர்பாத பணியாளர்கள் சேர்ந்து அம்பாள் வைக்கப்பட்ட தங்கப் பல்லக்கை தூக்கியபடி மூன்றாம் பிரகாரத்தை சுற்றி வந்தனர். அப்போது ராமேசுவரம் கோவில் யானை ராமலட்சுமி, தங்கப்பல்லக்கில் வந்த சாமியை துதிக்கையை உயர்த்தி வணங்கியது. அதன் பின்னர் தங்கப்பல்லக்கில் கூடிய அம்பாளுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. இந்த உலாவின் போது பக்தர்களுக்கு அனுமதி இல்லை. 9 மாதத்திற்கு பிறகு முதல் முறையாக நேற்று முதல் ராமேசுவரம் 
கோவிலில் தங்க பல்லக்கில் சாமி உலா வந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்