காரைக்குடி செஞ்சை நாட்டார் கண்மாயில் இருந்து நுரையுடன் வெளியேறும் தண்ணீர்; துர்நாற்றம் வீசுவதால் பொதுமக்கள் அவதி

காரைக்குடி செஞ்சை நாட்டார் கண்மாயில் இருந்து நிரம்பி மதகுகள் வழியாக வெளியேறும் தண்ணீர் நுரையுடன் துர்நாற்றம் வீசுவதால் அப்பகுதி மக்கள் முகம் சுழித்து வருகின்றனர்.

Update: 2020-12-19 01:29 GMT
காரைக்குடி செஞ்சை நாட்டார் கண்மாயில் இருந்து வெளியேறும் தண்ணீர் செல்லும் பகுதி
செஞ்சை நாட்டார் கண்மாய்
காரைக்குடி செஞ்சை பகுதியில் நாட்டார் கண்மாய் உள்ளது. இந்த கண்மாய் சுமார் 100 ஏக்கர் வரை பரப்பளவு கொண்டதாகும். காரைக்குடி பகுதியிலேயே பெரிய கண்மாய் இது. மழைக்காலங்களில் காரைக்குடியை சுற்றியுள்ள பாதரக்குடி, பேயன்பட்டி, கோவிலூர், ஒ.சிறுவயல், காரைக்குடி கழனிவாசல் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து மழைநீர் இந்த கண்மாய்க்கு வந்து நிரம்புவது வழக்கம்.

இந்த நிலையில் பருவ மழைக்காலங்களில் கடந்த 7ஆண்டுகளாக சரிவர நிரம்பாமல் இருந்து வந்தது. இந்நிலையில் கடந்த ஆண்டும், இந்தாண்டும் பெய்த பலத்த மழை காரணமாக இந்த கண்மாய் நிரம்பி மறுகால் போனது. கடந்த 20 நாட்களுக்கும் மேலாக இந்த கண்மாய் நிரம்பி மதகுகள் வழியாக மறுகால் செல்கிறது.

நுரையுடன் வெளியேறும் தண்ணீர்
மேலும் கடந்த காலங்களில் இந்த கண்மாயை முறையாக குடிமராமத்து செய்யாமல் விட்டதால் கண்மாய்கள் முழுவதும் ஆகாய தாமரை செடிகள் மற்றும் நாணல் புதர்கள் மண்டி முற்றிலும் காணப்பட்டுள்ளது. இதனால் தற்போது கண்மாய்களில் இருந்து வெளியேறும் தண்ணீர் அதிகளவு நுரையுடனும், ஒருவித துர்நாற்றம் வீசிய நிலையில் செல்கிறது. இது தெரியாமல் வேடிக்கை பார்க்க வந்த அப்பகுதி பொதுமக்கள் கண்மாயில் இருந்து வெளியேறும் தண்ணீர் துர்நாற்றம் வீசியதால் அவதியுடன் திரும்பி சென்றனர்.

குடிமராமத்து பணி
இதுகுறித்து அப்பகுதியைச் சேர்ந்த சமூக ஆர்வலர் கிருஷ்ணகுமார் கூறியதாவது-

மழைக்காலங்களில் இந்த கண்மாய் நிரம்பி இதிலிருந்து வெளியேறும் தண்ணீர் குடிக்காத்தான் கண்மாய், அரியக்குடி கண்மாய், உஞ்சனை கண்மாய், அமராவதிபுதூர் கண்மாய் வழியாக மணிமுத்தாறு ஆற்றில் இணைந்து பின்னர் தொண்டி கடலில் கலக்கிறது. இதற்கிடையில் இந்த கண்மாயில் இருந்து வெளியேறும் தண்ணீர் சுமார் 30 கிராம மக்கள் வரை விவசாயத்திற்கு பயன்படுத்தும் வகையில் உள்ளது. அத்தகைய சிறப்பு பெற்ற இந்த கண்மாயை சரிவர குடிமராமத்து பணி செய்யவில்லை.

இதனால் கண்மாய் முழுவதும் ஆகாயதாமரை செடிகள், நாணல்புதர்கள், காட்டு கருவேல் மரங்கள் உள்ளிட்டவைகள் ஆக்கிரமித்து உள்ளது. இதுதவிர அருகே உள்ள கெமிக்கல் ஆலையில் இருந்து வெளியேறும் தண்ணீரும் இந்த கண்மாயில் வந்து கலந்து ஒருவித துர்நாற்றத்தை வீசுகிறது.

பொதுமக்கள் அச்சம்
இதற்கு முந்தைய காலக்கட்டத்தில் இந்த கண்மாயில் இருந்து மறுகால் செல்லும் தண்ணீரில் காரைக்குடி நகர் மக்கள் வந்து உற்சாகமாக குளித்து மகிழ்ந்து வருவது வழக்கம். ஆனால் தற்போது துர்நாற்றத்துடன் தண்ணீர் வெளியேறுவதால் தண்ணீரில் இறங்க அவர்கள் அச்சமடைந்து வருகின்றனர். அவ்வாறு தண்ணீரில் இறங்கி குளித்தால் படர் தாமரை, தோல் வியாதி உள்ளிட்ட நோய்கள் வரும் என அச்சத்துடன் உள்ளனர்

எனவே அடுத்த ஆண்டு இந்த கண்மாயை மழைக்காலத்திற்கு முன்னதாகவே நன்றாக குடிமராமத்து செய்து கண்மாயில் உள்ள பல்வேறு செடிகளை அகற்றி சுத்தமாக வைத்திருக்க மாவட்ட பொதுப்பணித்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்