சிவகங்கை மாவட்டத்தில் தங்கக்கட்டிகள் வாங்கி தருவதாக கூறி 200 பவுன் நகை; ரூ.1 கோடி மோசடி; தம்பதி கைது
காரைக்குடியில் தங்கக்கட்டிகள் வாங்கி தருவதாக கூறி 200 பவுன் நகை, ரூ.1 கோடி மோசடி செய்த தம்பதியை போலீசார் கைது செய்தனர்.
தங்கக்கட்டி வாங்கி..
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி கலைமணி நகரைச் சேர்ந்தவர் ஆரோக்கிய சகாய தேவி(வயது 46). இவருக்கும் வாட்டர் டேங்க் அருகே வசித்து வரும் கயல்விழி(29) என்பவருக்கும் பழக்கம் இருந்துள்ளது. இந்த பழக்கத்தின் அடிப்படையில் கயல்விழி, ஆரோக்கிய சகாய தேவியிடம் தனது கணவர் மாணிக்கம் வெளிநாட்டு தங்கக்கட்டிகளை குறைந்த விலைக்கு வாங்கி விற்று வருகிறார்.
உங்களுக்கு தேவையானால் கூறுங்கள். வாங்கித் தரச் சொல்கிறேன் என ஆசைவார்த்தை காட்டியுள்ளார்.
அதனை நம்பி ஆரோக்கிய சகாய தேவி பாதி விலைக்கு கிடைக்கும் தங்கக்கட்டிகளை வாங்க ஆசைப்பட்டு கயல்விழியிடமும் அவரது கணவரிடமும் ரூ.27 லட்சத்தை கொடுத்துள்ளார்.பின் மீண்டும் கூடுதலாக தங்கம் வாங்கலாம் என ஆசைவார்த்தை காட்ட தான் வைத்திருந்த 34 பவுன் தங்க நகைகளையும் அவர்களிடம் கொடுத்து அதனை அடகு வைத்து அந்த பணத்திற்கும் தங்கம் வாங்குமாறு கூறியுள்ளார்.
கொலை மிரட்டல்
அனைத்தையும் பெற்றுக்கொண்ட மாணிக்கம்(32) -கயல்விழி தம்பதி பல நாட்கள் கடந்தும் தாங்கள் கூறியபடி பாதி விலையில் தங்கக்கட்டிகளை வாங்கித்தரவில்லை. இதுகுறித்து ஆரோக்கிய சகாய தேவி அவர்களிடம் கேட்டபோது பணப்பரிவர்த்தனையில் சிறு சிக்கல் உள்ளது என்று கூறி ஆரோக்கிய சகாய தேவியிடம் மேலும் பூர்த்தி செய்யப்படாத 10 காசோலைகளையும் வாங்கிச் சென்றுள்ளனர்.
நாட்கள் பல கடந்தும் தங்கக்கட்டிகளை வாங்கி தராததால் சந்தேகப்பட்ட ஆரோக்கியசகாய தேவி அவர்களிடம் கேட்கும் போது நீதான் எங்களுக்கு பணம் தர வேண்டும் என்று கூறி கொலை மிரட்டலும் விடுத்துள்ளனர்.
இதுகுறித்து ஆரோக்கிய சகாய தேவி காரைக்குடி வடக்கு போலீஸ் நிலையத்தில் புகார் செய்துள்ளார் அதேபோல அசோக் நகரைச் சேர்ந்த தேன்மொழி என்பவர் தனது 64 பவுன் நகைகளையும் ரூ.48 லட்சத்தையும் பறி கொடுத்துள்ளார். இரு புகார்கள் மீதும் காரைக்குடி வடக்கு காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது இந்த சம்பவம் கடந்த ஆண்டில் நடைபெற்றது.
தம்பதி கைது
அதனைத்தொடர்ந்து அந்த தம்பதி தலைமறைவானார்கள். .சில மாதங்கள் கழித்து மீண்டும் இதேபோல மாணிக்கம்-கயல்விழி தம்பதி காரைக்குடி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மோசடியில் ஈடுபட்டுள்ளதாக போலீசாருக்கு புகார்கள் தொடர்ந்து வந்த வண்ணம் இருந்தன. இவ்வாறு 200 பவுன் நகைகள் ரூ.1 கோடி பணம் மோசடி செய்யப்பட்டிருப்பது தெரிய வந்தது.இந்நிலையில் அந்த தம்பதியினர் மீண்டும் தலைமறைவாகிவிட்டனர்.
இவர்களை பிடிக்க தனி போலீஸ் படை அமைக்கப்பட்டது தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தி கோவையில் பதுங்கியிருந்த மாணிக்கம்-கயல்விழியை கைது செய்தனர். அவர்களிடம் நடந்த விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.இந்த மோசடி சம்பவத்தில் பல முக்கிய பிரமுகர்களுக்கு தொடர்பு இருப்பது தெரிய வந்துள்ளது.அதன் பேரிலும் போலீசார் விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர்.