விவசாயிகளுக்கு ஆதரவாக காங்கிரஸ் கூட்டணி கட்சியினர் உண்ணாவிரதம் முதல்-அமைச்சர் நாராயணசாமி பங்கேற்பு
விவசாயிகளுக்கு ஆதரவாக காங்கிரஸ் கூட்டணி கட்சியினர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் முதல்-அமைச்சர் நாராயணசாமி மற்றும் தலைவர்கள் கலந்து கொண்டனர்.
புதுச்சேரி,
மத்திய அரசு கொண்டுவந்துள்ள 3 வேளாண் சட்டங்களை திரும்பப் பெறக் கோரி கடந்த 20 நாட்களுக்கும் மேலாக டெல்லியை முற்றுகையிட்டு விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். நாடு முழுவதும் அவர்களுக்கு பல்வேறு அரசியல் கட்சிகள், அமைப்புகள் சார்பில் ஆதரவு தெரிவிக்கப்பட்டு வருகிறது.
தமிழகம், புதுவையிலும் விவசாயிகளுக்கு ஆதரவாக போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில் புதுவை அண்ணா சிலை அருகே நேற்று மாநில காங்கிரஸ் தலைவர் ஏ.வி.சுப்பிரமணியன் தலைமையில் உண்ணாவிரத போராட்டம் நடந்தது.
இதில் முதல்-அமைச்சர் நாராயணசாமி, அமைச்சர்கள் நமச்சிவாயம், கந்தசாமி, ஷாஜகான், வைத்திலிங்கம் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் லட்சுமி நாராயணன், அனந்தராமன், ஜெயமூர்த்தி, விஜயவேணி, தீப்பாய்ந்தான், ஜான்குமார், இந்திய கம்யூனிஸ்டு மாநில செயலாளர் சலீம், முன்னாள் அமைச்சர் விசுவநாதன், முன்னாள் எம்.எல்.ஏ. நாரா.கலைநாதன், மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு செயலாளர் ராஜாங்கம், ம.தி.மு.க. பொறுப்பாளர் கபிரியேல், மனிதநேய மக்கள் கட்சி அப்துல்சமது, ராஷ்ட்ரீய ஜனதாதளம் சஞ்சீவி, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாணவர் அமைப்பு தமிழ்வாணன் உள்பட கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
கொட்டும் மழையில் நடந்த இந்த போராட்டத்தையொட்டி மழைநீர் புகாத வகையில் பந்தல் அமைக்கப்பட்டிருந்தது. இளைஞர், மாணவர் காங்கிரசார் ஊர்வலமாக வந்து இந்த உண்ணாவிரதத்தில் கலந்துகொண்டனர். போராட்டத்தின்போது தலைவர்கள் பேசுகையில், மத்திய கார்பரேட் நிறுவனங்களுக்கு ஆதரவளிக்காமல், விவசாயிகளின் போராட்டத்துக்கு மதிப்பளித்து உடனே வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்தினர்.
உண்ணாவிரதத்தில் கலந்துகொண்ட முதல்-அமைச்சர் நாராயணசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-
எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பினையும் மீறி 3 வேளாண் சட்டங்களை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. இந்த சட்டங்களை வாபஸ்பெறக்கோரி கடுங்குளிர் வாட்டியபோதும் அதைப்பற்றி கவலைப்படாமல் டெல்லியில் விவசாயிகள் 20 நாட்களுக்கும் மேலாக போராட்டத்தை தொடர்கின்றனர். அதைப்பற்றியெல்லாம் கவலைப்படாமல் விவசாயிகளை தூண்டும் வகையில் பிரதமர் பேசி வருகிறார்.
பிரதமர் மோடி தலைமையிலான அரசு தொழிலாளர்களை, விவசாயிகளை, மீனவர்களை, பிற்படுத்தப்பட்டவர்களை, மாணவர்களை வஞ்சிக்கும் அரசாக உள்ளது. சிறுபான்மையினரை துன்புறுத்தி பழிவாங்கும் நோக்கில் செயல்பட்டு வருகிறது. வேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட்டத்தில் 21 பேர் இறந்துள்ளனர். அவர்களைப்பற்றி மத்திய அரசு கவலைப்படவில்லை. நாங்கள் எப்போதும் விவசாயிகளுக்கு உறுதுணையாக இருப்போம். விவசாய விரோத சட்டங்களை வாபஸ் பெறும்வரை எங்களது போராட்டம் தொடரும். இவ்வாறு அவர் கூறினார்.