கருவடிக்குப்பம் பகுதியில் அடிப்படை வசதிகேட்டு பொதுமக்கள் சாலைமறியல்
கருவடிக்குப்பம் பகுதியில் அடிப்படை வசதிகள் செய்துதரக்கோரி பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.;
புதுச்சேரி,
புதுவை கருவடிக்குப்பம் அணைக்கரை மேடு வாய்க்காலுக்கு மதில் சுவர் இல்லாததால் மழைக்காலங்களில் அதிக அளவில் தண்ணீர் செல்லும்போது வாய்க்காலில் குழந்தைகள், முதியவர்கள் தவறிவிழுந்து விடுவதாகவும், அந்த வாய்க்காலுக்கு மதில்சுவர் அமைக்கவேண்டும், சாலைகளை சீரமைக்கவேண்டும், கொசுவை ஒழிக்கவேண்டும் என்பன போன்ற அடிப்படை வசதிகளை செய்து தரக்கோரி சிங்கம் பார்க் அருகே நேற்று சாலைமறியல் போராட்டம் நடந்தது.
இதில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் சாமிப்பிள்ளைதோட்டம், லெனின் நகர், வாஞ்சிநாதன் நகர், ஜோதிநகர், பகத்சிங் நகர் பகுதி கிளை நிர்வாகிகளான அண்ணாமலை, ஸ்டாலின், பிரதாப், மாதவராமன், தயாளன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
இந்த போராட்டத்தால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து தகவல் கிடைத்ததும் போலீசார் விரைந்து வந்து அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். ஆனால் அதை பொதுமக்கள் ஏற்கவில்லை. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வந்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தினார்கள்.
இதையடுத்து தாசில்தார் குமரன், பொதுப்பணித்துறை உதவி பொறியாளர் ஏழுமலை, உழவர்கரை நகராட்சி உதவி பொறியாளர் மலைவாசன், இளநிலை பொறியாளர் ஜெய்சங்கர் மற்றும் அதிகாரிகள் வந்து பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அவர்கள் வாய்க்காலுக்கு மதில் சுவர் கட்டி தருவதாக உறுதியளித்தனர். அதிகாரிகளின் உறுதிமொழியை ஏற்று சாலைமறியலில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.