கமல்ஹாசனுக்கு எந்த கொள்கையும் இல்லை - அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கடும் தாக்கு

நடிகர் கமல்ஹாசனுக்கு எந்த கொள்கையும் இல்லை என்று அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறினார்.

Update: 2020-12-19 00:11 GMT
நெல்லை, 

நெல்லை புதிய பஸ் நிலையம் அருகே உள்ள மாவட்ட அ.தி.மு.க. அலுவலகத்தில் பூத் கமிட்டி அமைப்பது தொடர்பான ஆலோசனை கூட்டம் நேற்று மாலை நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட செயலாளர் தச்சை கணேசராஜா தலைமை தாங்கினார். ஆதிதிராவிட நலத்துறை அமைச்சர் ராஜலட்சுமி முன்னிலை வகித்தார்.

கூட்டத்தில் தமிழக வருவாய்த்துறை அமைச்சரும், மாவட்ட தேர்தல் பொறுப்பாளருமான ஆர்.பி.உதயகுமார் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

வருகிற சட்டமன்ற தேர்தலுக்கான பணிகள் தொடங்கிவிட்டன. தலைமை கழக அறிவிப்பின்படி பூத் கமிட்டி அமைப்பது தொடர்பாக ஆலோசனை கூட்டம் நடந்து வருகிறது. இதைத்தொடர்ந்து ஒன்றியச செயலர்கள் கூட்டம் நடைபெறும்.

அ.தி.மு.க. அரசின் சாதனைகளை வீடு வீடாக சென்று பிரசாரம் செய்வோம். மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா வழியில் வந்த இந்த அரசு மக்களுக்கு தேவையான அனைத்து திட்டங்களையும் செய்து வருகிறது. நீர் மேலாண்மை திட்டம், சட்டம்- ஒழுங்கு, கொரோனா வைரஸ் தடுப்பு உள்ளிட்டவைகளில் இந்தியாவிலேயே தமிழகம் முதல் இடத்தை பிடித்துள்ளது.

அ.தி.மு.க. அரசு 4 ஆண்டுகளில் 40 ஆயிரம் போராட்டங்களை சந்தித்துள்ளது. எதிர்க்கட்சிகள் தான் வேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட்டங்களை தூண்டி விடுகின்றன. வேளாண் சட்டங்களை எதிர்த்து போராட்டம் நடத்தும் தி.மு.க.வின் பாச்சா பலிக்காது.

விவசாயிகள் போராட்டம் தமிழ்நாட்டில் எந்தவிதமான பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை. எதிர்க்கட்சிகள் பொய் பிரசாரத்தை முறியடிக்கும் வகையில் எங்களது பிரசாரம் அமையும்.

ஓய்வு பெற்றவர்கள் தற்போது அரசியலுக்கு வந்து ஒப்பாரி வைக்கின்றனர். புயல், மழை, வறட்சி எந்த சூழ்நிலையிலும் பங்களிப்பு செய்யாமல் தற்போது புதிதாக அரசியலுக்கு வந்துள்ளவர்கள், கடமை ஆற்றி கொண்டு இருக்கும் எங்கள் மீது சேற்றை வாரி அடிக்கின்றனர். கமல்ஹாசன் போன்றவர்கள் புதிதாக வந்து என்ன திட்டங்களை மக்களுக்கு கொடுக்கப்போகிறார்கள். அவர்கள் என்ன திட்டங்கள் வைத்திருக்கிறார்கள் என்பதை பற்றி இதுவரை கூறியிருக்கிறார்களா?

எம்.ஜி.ஆரின் சொந்த வீடு அ.தி.மு.க.. புதிதாக வீடு கட்டியவர்கள் அந்த உரிமையை எடுக்க முடியாது. எம்.ஜி.ஆர். அ.தி.மு.க.விற்கே சொந்தம். எம்.ஜி.ஆரின் வாரிசு என்பது போல் கமல்ஹாசன் பேசி வருகிறார். கமல்ஹாசன் எந்த கொள்கையும் இல்லாமல் பிரசாரம் செய்வது வேடிக்கையாக இருக்கிறது.

நாங்குநேரி காங்கிரஸ் தொகுதியில் எப்படி அ.தி.மு.க. வெற்றி பெற்றதோ அதேபோன்று நெல்லை, பாளையங்கோட்டை தொகுதிகளிலும் அ.தி.மு.க. வெற்றி பெறும். மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு நிலம் கையகப்படுத்த தேவையில்லை. புரிந்துணர்வு ஒப்பந்தம் விரைவில் நடைபெற்று பணிகள் தொடங்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில் ரெட்டியார்பட்டி நாராயணன் எம்.எல்.ஏ., அமைப்பு செயலாளர்கள் சுதா பரமசிவன், ஏ.கே.சீனிவாசன், கொள்கை பரப்பு துணைச் செயலாளர் பாப்புலர் முத்தையா, மாநில மகளிர் அணி செயலாளர் விஜிலா சத்யானந்த், ஜெயலலிதா பேரவை செயலாளர் ஜெரால்டு, சிறுபான்மை பிரிவு மாவட்ட செயலாளர் மகபூப் ஜான், நெல்லை கூட்டுறவு பேரங்காடி தலைவர் பல்லிக்கோட்டை செல்லத்துரை, மாவட்ட அவைத்தலைவர் சவுந்தரராஜன், ராதாபுரம் மேற்கு ஒன்றிய செயலாளர் அந்தோணி அமல்ராஜா, இளைஞரணி மாவட்ட செயலாளர் பால்துரை, முன்னாள் அமைப்பு செயலாளர் நாராயணபெருமாள், வர்த்தக அணி செயலாளர் அம்மா செல்வகுமார், பாளையங்கோட்டை தெற்கு ஒன்றிய செயலாளர் முத்துக்குட்டி பாண்டியன், எஸ்.கே.எம். சிவக்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்