ஊத்துக்கோட்டையில், சிற்றம்பாக்கம் தடுப்பணையை ஆபத்தான முறையில் கடக்கும் பொதுமக்கள்

ஆரணி ஆற்றில் இருந்த தரைப்பாலம் வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டதால், சிற்றம்பாக்கம் தடுப்பணை பகுதியில் உள்ள கான்கிரீட் சாலையை பொதுமக்கள் ஆபத்தான முறையில் கடந்து செல்கின்றனர்.

Update: 2020-12-18 23:39 GMT
சிற்றம்பாக்கம் ஆரணி ஆற்று தடுப்பணையின் மீது மூழ்கிய நிலையில் பொதுமக்கள் கடந்து செல்லும் காட்சி
அடித்துச்செல்லப்பட்ட தரைப்பாலம்
‘நிவர்’ புயல் காரணமாக ஊத்துக்கோட்டை மற்றும் ஆந்திர மாநிலம் பிச்சாட்டூர் பகுதியில் பலத்த மழை பெய்தது. இதனால் பிச்சாட்டூரில் உள்ள ஆரணியார் அணை முழுவதுமாக நிரம்பியது. 

இதையடுத்து கடந்த மாதம் 25-ந்தேதி ஆரணி ஆற்றில் தண்ணீர் திறக்கப்பட்டது.

இதனால் ஊத்துக்கோட்டை ஆரணி ஆற்றில் இருந்த தரைப்பாலம் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது. இதனை தொடர்ந்து தரைப்பாலம் வழியாக வாகனப்போக்குவரத்து ரத்து செய்யப்பட்டுள்ளது. 

தரைப்பாலம் அடித்து செல்லப்பட்ட சுமார் 3 கிலோ மீட்டர் தூரத்தில் சிற்பாக்கம் பகுதியில் 1980-ம் ஆண்டு ஆரணி ஆற்றின் மீது கட்டப்பட்ட தடுப்பு அணை உள்ளது. ஆரணி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக இந்த தடுப்பு அணை முழுவதுமாக நிரம்பி வழிகிறது.

ஆபத்தை உணராமல்...
இதற்கிடையே தரைப்பாலம் வழியாக வாகனப் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டால், தடுப்பணையின் கிழக்கு திசையில் உள்ள கான்கிரீட் சாலை வழியாக அந்தேரி, போந்தவாக்கம், பேரிட்டிவாக்கம், மாம்பாக்கம், வேலகாபுரம் உட்பட 20 கிராம பொதுமக்கள் கடந்து செல்வது உண்டு.

இந்த நிலையில், சிற்றம்பாக்கம் தடுப்பு அணை முழுவதுமாக நிரம்பி வழிவதால், கடந்த 25-ந்தேதி முதல் போலீசார் கான்கிரீட் சாலையையும் கடக்க அனுமதிக்கவில்லை. இந்நிலையில் ஆரணி ஆற்றில் நேற்று வெள்ளம் சற்று குறைந்துள்ளதால் போலீசார் கண்காணிப்பில் ஈடுபடவில்லை. இதையடுத்து தடுப்பணையின் மீது மூழ்கிய நிலையில் உள்ள கான்கிரீட் சாலையை தற்போது ஆபத்தான முறையில் 20 கிராம பொதுமக்களும் கடந்து செல்கின்றனர்.

ஆபத்தை உணராமல் வாகன ஓட்டிகள் உள்ளிட்டோர் சென்று வரும் நிலையில், கான்கிரீட் சாலையில் தண்ணீருக்கு அடியில் பாசி படிந்து உள்ளதால், வழுக்கி விழும் சம்பவம் நடைபெற்று வருகின்றன.

மேலும் செய்திகள்