சோழிங்கநல்லூர் போலீஸ் நிலையத்தில், விசாரணைக்கு வந்தவர் பஸ் முன் பாய்ந்து தற்கொலை
சோழிங்கநல்லூர் போலீஸ் நிலையத்தில் விசாரணைக்கு வந்தவர் பஸ் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.
போலீஸ் விசாரணை
சென்னையை அடுத்த சோழிங்கநல்லூர் லால்பகதூர் சாஸ்திரி தெருவை சேர்ந்தவர் பானுமதி (வயது 45). இவரது வீட்டின் அருகே பிளம்பராக வேலை பார்க்கும் சதீஷ்குமார் (33) என்பவர் வசித்து வருகிறார். நேற்று முன்தினம் சதீஷ்குமார் பானுமதி வீட்டின் மீது கற்களை வீசியதாக கூறப்படுகிறது. இதனையடுத்து பானுமதி செம்மஞ்சேரி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
புகாரின் பேரில் போலீசார் சதீஷ்குமாரை நேற்று மாலை போலீஸ் நிலையத்திற்கு வரவழைத்து விசாரணை மேற்கொண்டனர்.
தற்கொலை
விசாரணையின் போது திடீரென சதீஷ்குமார் போலீஸ் நிலையத்தில் இருந்து வெளியே ஓடிவந்து நாவலூர் நோக்கி சென்ற மாநகர பஸ் முன் பாய்ந்தார். இதில் சதீஷ்குமார் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த சம்பவம் அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. போலீஸ் விசாரணைக்கு பயந்து அவர் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது போலீசாருக்கு பயந்து போலீஸ் நிலையத்தில் வெளியே ஓடி வந்த போது விபத்தில் சிக்கினாரா? என்பது குறித்து போலீஸ் உயர் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு
வருகின்றனர்.
முற்றுகை
சதீஷ் குமாரின் உடல் பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த நிலையில் சதீஷ் குமாரின் சகோதரர் கார்த்திகேயன் மற்றும் உறவினர்கள் செம்மஞ்சேரி போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டனர் மேலும் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. போலீசார் சதீஷ் குமாரின் சகோதரர் கார்த்திகேயன் மற்றும் உறவினர்களை சமாதானப்படுத்தி அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.
சதீஷ் குமாரின் சகோதரர் கார்த்திகேயன் கூறும்போது:-
போலீசார் விசாரணைக்கு வரவழைத்து அடித்து கொன்று விட்டதாக தெரிவித்தார்.
இதற்கிடையில் அங்கு உள்ள கண்காணிப்பு கேமரா காட்சியில் போலீஸ் நிலையத்திற்கு வெளியே சதீஷ்குமார் நிற்பதும், பஸ் வந்ததும் அதில் பாய்வதும் பதிவாகி உள்ளது.