வீட்டில் நடந்த விருந்து நிகழ்ச்சியில் போதைப்பொருள் எதுவும் பயன்படுத்தவில்லை சினிமா இயக்குனர் கரன் ஜோகர் பதில்

வீட்டில் நடந்த விருந்து நிகழ்ச்சியில் போதைப்பொருள் எதுவும் பயன்படுத்தப்படவில்லை என போதைப்பொருள் தடுப்பு பிரிவின் நோட்டீசுக்கு சினிமா இயக்குனர் கரன் ஜோகர் பதில் அளித்தார்.;

Update: 2020-12-18 22:39 GMT
மும்பை, 

இந்தி சினிமா இயக்குனரும், தயாரிப்பாளருமான கரன் ஜோகா் வீட்டில் கடந்த ஆண்டு விருந்து நிகழ்ச்சி நடந்தது. இதில் பல முன்னணி சினிமா நட்சத்திரங்கள் கலந்து கொண்டனர். இந்தநிலையில் நடிகர் சுஷாந்த் சிங் மரணத்திற்கு பிறகு போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் இந்தி திரையுலகினருக்கும், போதைப்பொருள் கும்பலுக்கும் இடையே உள்ள தொடர்பு குறித்து விசாரணையை தொடங்கினர்.

அந்த நேரத்தில் கரன் ஜோகர் வீட்டில் நடந்த விருந்து நிகழ்ச்சியில் எடுக்கப்பட்ட வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் பரவியது. அந்த வீடியோவில் பல சினிமா பிரபலங்கள் போதையில் இருப்பதை காண முடிந்தது. இதையடுத்து கரன்ஜோகர் விருந்து நிகழ்ச்சியில் தடை செய்யப்பட்ட போதைப்பொருள் பயன்படுத்தப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. ஆனால் அதை அவர் மறுத்து அறிக்கை வெளியிட்டு இருந்தார்.

இந்தநிலையில் தற்போது சிரோமனி அகாலி தள கட்சியை சேர்ந்த மஜிர்தர் சிங் சிர்சா அளித்த புகாரின் அடிப்படையில் அந்த வீடியோ குறித்து கரன் ஜோகருக்கு போதைப்பொருள் தடுப்பு பிரிவு நோட்டீஸ் அனுப்பியது. இந்த நோட்டீசுக்கு கரன் ஜோகர் போதைப்பொருள் தடுப்பு பிரிவுக்கு பதில் அளித்து உள்ளார்.

அதுகுறித்து போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரி ஒருவர் கூறுகையில், “விருந்து நிகழ்ச்சி குறித்து கரன் ஜோகரிடம் விளக்கம் கேட்கப்பட்டு இருந்தது. அதற்கு அவர் வெள்ளிக்கிழமை (நேற்று) பதில் அளித்து உள்ளார். அந்த பதிலில் அவர் விருந்து நிகழ்ச்சியில் போதை பொருள் எதுவும் பயன்படுத்தப்படவில்லை என கூறியுள்ளார்” என்றார்.

மேலும் செய்திகள்