மங்களூருவில் சிறுவனை கடத்தி ரூ.17 கோடி கேட்டு மிரட்டல் மர்மநபர்களை பிடிக்க போலீசார் தீவிர தேடுதல் வேட்டை
மங்களூருவில் சிறுவனை கடத்தி ரூ.17 கோடி கேட்டு மிரட்டல் விடுக்கும் மர்மநபர்களை பிடிக்க போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
மங்களூரு,
தட்சிண கன்னடா மாவட்டம் ெபல்தங்கடி தாலுகா உஜிரி ஆஷாவதகட்டே பகுதியை சேர்ந்தவர் பிஜாய். தொழில் அதிபர். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் அனுபவ் (வயது 8) என்ற ஒரு மகனும் உள்ளனர். இந்த நிலையில், அனுபவ் நேற்று முன்தினம் அங்குள்ள ஜனார்த்தன சுவாமி கோவில் மைதானத்தில் தனது தாத்தா சிவன் என்பவருடன் நடைபயிற்சி ெசன்று கொண்டிருந்தான்.
அப்போது அங்கு கார் ஒன்று வந்தது. அந்த காரில் இருந்து இறங்கிய மர்மநபர்கள், அனுபவை வாயை பொத்தி குண்டுக்கட்டாக தூக்கி காரில் ஏற்றி அங்கிருந்து செல்ல முயன்றனர். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த சிவன், தனது பேரனை காப்பாற்ற முயன்றார். ஆனாலும் மர்மநபா்கள் அவரை கீழே தள்ளிவிட்டு அனுபவை கடத்திக் கொண்டு அங்கிருந்து கண் இமைக்கும் நேரத்தில் தப்பி சென்றுவிட்டனர்.
இந்த நிலையில் அனுபவை கடத்தி ெசன்ற மர்மநபர்கள் சிறிது நேரத்தில், பிஜாயின் மனைவியை செல்போனில் தொடர்புகொண்டுள்ளனர். அப்போது, உனது மகன் உயிருடன் வேண்டும் என்றால் 100 பிட்காயின் அல்லது ரூ.17 கோடி கொடுக்க வேண்டும். இல்லை என்றால் உனது மகனை கொலை செய்து விடுவோம். போலீசுக்கு சென்றால் உனது மகனை உயிருடன் பார்க்க முடியாது. பணத்தை கொடுக்க வேண்டிய முகவரியை பின்னர் தெரிவிக்கிறோம் என்று கூறிவிட்டு செல்போன் இணைப்பை துண்டித்து விட்டனர்.
இதற்கிடைேய சிறுவனின் தாத்தா சிவன், பெல்தங்கடி போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பார்வையிட்டனர். மேலும் அந்தப்பகுதியை சேர்ந்தவர்களிடம் விசாரணை மேற்கொண்டனர். மேலும் அங்கு கண்காணிப்பு கேமரா எதுவும் பொருத்தப்பட்டுள்ளதா? என்று ஆய்வு செய்தனர்.
பின்னர் வீட்டுக்கு சென்று கடத்தல்காரர்கள் மிரட்டல் விடுத்த செல்போன் எண்ணை ஆய்வு செய்தனர். மேலும் பிஜாயின் மனைவியிடமும் போலீசார் விசாரணை நடத்தினார்கள். அப்போது கடத்தல்காரர்கள் இந்தி, கன்னடம் கலந்து பேசியது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் தட்சிண கன்னடா மாவட்டம் முழுவதும் சோதனைச்சாவடியை உஷார்படுத்தி உள்ளனர். சந்தேகப்படும்படியாக வரும் காரை தடுத்து நிறுத்தி சோதனை செய்யும்படி போலீசார் உத்தரவிட்டுள்ளனர்.
இதுகுறித்து பெல்தங்கடி போலீசார் வழக்குப்பதிவு செய்து, சிறுவனை கடத்தி சென்ற மர்மநபர்களை பிடிக்க தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வருகிறார்கள்.