திண்டுக்கல்லில் வளர்ச்சி பணிகள் குறித்து சட்டசபை பொது கணக்குக்குழுவினர் ஆய்வு
திண்டுக்கல்லில் வளர்ச்சி திட்ட பணிகளை சட்டசபை பொது கணக்குக்குழுவினர் ஆய்வு செய்தனர்.;
திண்டுக்கல்,
தமிழக சட்டசபையில் மானிய கோரிக்கையின் போது அனைத்து துறைகளுக்கும் நிதி ஒதுக்கப்படுகிறது. அந்த நிதி முறையாக செலவு செய்யப்படுகிறதா? நிலுவையில் இருக்கிறதா? என்று சட்டசபை பொது கணக்குக்குழு ஆய்வு செய்கிறது. இந்த குழுவின் தலைவராக துரைமுருகன் எம்.எல்.ஏ. உள்ளார்.
இந்த நிலையில் சட்டசபை பொதுக்கணக்கு குழுவினர், ஆய்வுக்காக நேற்று திண்டுக்கல்லுக்கு வந்தனர். இதையொட்டி திண்டுக்கல் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட வளர்ச்சி திட்டங்கள் தொடர்பான ஆய்வு கூட்டம், திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்துக்கு குழு தலைவர் துரைமுருகன் தலைமை தாங்கினார்.
மேலும் திண்டுக்கல் கலெக்டர் விஜயலட்சுமி முன்னிலை வகித்தார். இதில் குழுவின் உறுப்பினர்களான எம்.எல்.ஏ.க்கள் உதயசூரியன் (சங்கராபுரம்), நடராஜ் (மைலாப்பூர்), பழனிவேல் தியாகராஜன் (மதுரை மத்திய தொகுதி), டி.ஆர்.பி.ராஜா (மன்னார்குடி), சட்டசபை ெசயலாளர் சீனிவாசன் மற்றும் அனைத்து துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.
திண்டுக்கல் மாவட்டத்தில் சுற்றுச்சூழல், வனத்துறை, வருவாய்த்துறை, குடிநீர் வடிகால் வாரியம், போக்குவரத்து கழகம், மருத்துவம் உள்பட அனைத்து துறைகளிலும் மேற்கொள்ளப்படும் வளர்ச்சி பணிகள், நிறைவேற்றப்பட்ட பணிகள், செலவிடப்பட்ட நிதி தொடர்பாக ஆய்வு செய்தனர். இதையடுத்து சென்னமநாயக்கன்பட்டி கள்ளர் மேல்நிலைப்பள்ளியில் நபார்டு திட்டத்தில் கட்டப்படும் புதிய கட்டிடம், நவீன ஆய்வகம் உள்ளிட்டவற்றை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
இதில் வேலுச்சாமி எம்.பி. மற்றும் எம்.எல்.ஏ.க்கள் அர.சக்கரபாணி, ஆண்டிஅம்பலம், இ.பெ.செந்தில்குமார் மற்றும் மாவட்ட வருவாய் அலுவலர் கோவிந்தராசு மற்றும் அனைத்து துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.