சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பு: 2½ லட்சம் பேருக்கு கொரோனா பரிசோதனை - சுகாதாரத்துறை அதிகாரி தகவல்
சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பால் 2½லட்சம் பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு உள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரி தெரிவித்தார்.;
ஊட்டி,
ஊரடங்கில் தளர்வு அறிவிக்கப்பட்டதால் நீலகிரி மாவட்டத்தில் அனைத்து சுற்றுலா மையங்களும் திறக்கப்பட்டு உள்ளது. இதனால் வெளிமாநிலங்கள், வெளிமாவட்டங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் அதிகம் பேர் வந்து செல்கின்றனர்.
மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டு வரும் தடுப்பு நடவடிக்கைகளால் தற்போது கொரோனா பாதிப்பு குறைந்து இருக்கிறது. இருப்பினும் சுற்றுலா பயணிகள் வருகை அதிகமாக உள்ளதாலும், பண்டிகைகள் நெருங்குவதாலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன.
வெளியிடங்களில் இருந்து வரும் சுற்றுலா பயணிகள் கொரோனா பரவாமல் இருக்க பூங்கா பணியாளர்களுக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதுபோன்று வெளியிடங்களில் இருந்து வரும் சுற்றுலா பயணிகளுக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது.
இதுகுறித்து சுகாதாரத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:-
நீலகிரி மாவட்டம் சுற்றுலா மையம் என்பதால் பல்வேறு இடங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இதை கருத்தில் கொண்டும், உள்ளூர் மக்களுக்கு தொற்று பரவாமல் இருக்கவும் இங்கு வரும் சுற்றுலா பயணிகள் அனைவருக்கும் தொடர்ந்து கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சோதனைச்சாவடிகளில் சுகாதாரத்துறையினர் முகாமிட்டு சளி மாதிரி சேகரித்து ஆய்வகங்களுக்கு அனுப்பி வைக்கின்றனர்.
நீலகிரி மாவட்டத்தில் இதுவரை 2 லட்சத்து 53 ஆயிரம் பேரிடம் இருந்து சளி மாதிரி சேகரிக்கப்பட்டு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு உள்ளது. கல்லூரிகளில் மாணவ-மாணவிகளுக்கு பரிசோதனை மேற்கொண்டதில் யாருக்கும் கொரோனா பாதிப்பு இல்லை என்று உறுதி செய்யப்பட்டது. சுற்றுலா தலங்களில் தெர்மல் ஸ்கேனர் சோதனையின்போது காய்ச்சல் இருப்பது கண்டறியப்பட்டால், சம்பந்தப்பட்டவர்களுக்கு உடனடியாக கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.