கார்த்திகை தீபத்திருவிழாவின் போது, மகாதீபம் ஏற்றப்பட்ட மலை உச்சியில் பிராயசித்த பூஜை; பாதத்துக்கு சிறப்பு அபிஷேகம்

கார்த்திகை தீபத்திருவிழாவின் போது மகாதீபம் ஏற்றப்பட்ட மலை உச்சியில் பிராயசித்த பூஜை செய்யப்பட்டது. பாதத்துக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது.

Update: 2020-12-18 06:34 GMT
மலை உச்சியில் உள்ள அண்ணாமலையார் பாதத்திற்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டு உள்ளதை படத்தில் காணலாம்.
தீபத்திருவிழா
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்குகிறது. இந்த கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்கின்றனர். இக்கோவிலில் பல்வேறு விழாக்கள் நடைபெற்று வருகிறது. இதில் கார்த்திகை மாதத்தில் வரும் தீபத்திருவிழா சிறப்பு வாய்ந்ததாகும். நடந்து முடிந்த தீபத் திருவிழாவின் போது கோவிலின் பின்புறம் உள்ள 2,668 அடி உயரமுள்ள மலையின் உச்சியில் மகாதீபம் ஏற்றப்பட்டது. இந்த மகா தீபமானது தொடர்ந்து 11 நாட்கள் மலை உச்சியில் காட்சி அளித்தது.

மலை மீது ஏற்பட்ட மகாதீபத்தை மலையேறி சென்ற நேரில் தரிசனம் செய்ய மாவட்ட நிர்வாகம் மற்றும் வனத்துறை சார்பில் தடை விதிக்கப்பட்டு இருந்தது. இருப்பினும் மகாதீபம் மலை உச்சியில் காட்சி அளித்த நாட்களில் ஏராளமான பக்தர்கள் மலை ஏறிச்சென்று தீபத்தை தரிசனம் செய்தனர்.

பிராயசித்த பூஜை
திருவண்ணாமலையில் மலையே சிவனாக வணங்கப்படுகிறது. அத்தகைய சிறப்பு வாய்ந்த மலையில் பக்தர்கள் மிதித்து ஏறியதால் பிராயசித்த பூஜை நடத்தப்படும். அப்போது மலையில் உள்ள அண்ணாமலையார் பாதத்திற்கும் அபிஷேகம் நடத்தப்படும். தீபத்திருவிழா முடிந்த சில நாட்களில் இந்த பூஜைகள் நடைபெறுவது வழக்கம்.

அதன்படி இந்த ஆண்டிற்கான பிராயசித்த பூஜை நேற்று நடந்தது. இதனையொட்டி அருணாசலேஸ்வரர் கோவிலில் புனித நீர் நிரப்பப்பட்ட யீலசங்கள் வைத்து சிறப்பு ஹோமம் நடத்தி சாமிகளுக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து புனிதநீர் கலசத்தை மலைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு பிராயசித்த பூஜை நடந்தது. பின்னர் மலை உச்சியில் உள்ள அண்ணாமலையார் பாதத்துக்கு அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு பூஜை நடந்தது. இந்த நிகழ்ச்சியில் கோவில் அலுவலர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்