8 மாதங்களுக்கு பின்னர் கோலப்பன் ஏரியில் படகு சவாரி தொடக்கம்; சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி
8 மாதங்களுக்கு பின்னர் ஜமுனாமரத்தூரில் உள்ள கோலப்பன் ஏரியில் படகு சவாரி தொடங்கியது.
கோலப்பன் ஏரி
திருவண்ணாமலை மாவட்டத்தில் இயற்கை எழில் கொஞ்சும் ஜமுனாமரத்தூர் மலை கிராமத்தில் உள்ள கோலப்பன் ஏரியில் நடைபெறும் படகு சவாரி சிறப்பு வாய்ந்ததாகும். ஜமுனாமரத்தூரில் ஆண்டுதோறும் நடைபெறும் கோடை விழாவுடன், சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் படகு சவாரி செய்ய அதிக அளவில் சுற்றுலா பயணிகள் வருகை தருவார்கள்.
மேலும் அங்குள்ள பீமன் நீர்வீழ்ச்சி, சுற்றுச்சூழல் பூங்கா போன்றவற்றையும் சுற்றுலா பயணிகள் பார்வையிடுவார்கள். இதனால் சுற்றியுள்ள கிராமத்து மக்களுக்கு வருமானம் கிடைத்து வந்தது. கொரோனா ஊரடங்கு காரணமாக கோலப்பன் ஏரியில் படகு சவாரி நிறுத்தப்பட்டது. இதனால் கோலப்பன் ஏரியில் இருந்த 2 மோட்டார் படகுகள், 3 பெடல் படகுகள், ஒரு துடுப்பு படகு ஆகியவை பயனற்று காணப்பட்டது. மேலும் அங்கு பணியிலிருந்த ஊழியர்கள் வேலை இல்லாத நிலை ஏற்பட்டது.
படகு சவாரி தொடங்கியது
சமீபத்தில் பெய்த பலத்த மழையால் கோலப்பன் ஏரி முழுமையாக நிரம்பி உள்ளது. ஜமுனாமரத்தூருக்கு சுற்றுலாவிற்கு வரும் பொதுமக்கள் படகு சவாரியை மீண்டும் தொடங்க வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தனர்.
இந்த நிலையில் கோலப்பன் ஏரியில் படகு சவாரி சேவை தொடங்கப்பட்டது. இதன் தொடக்க நிகழ்ச்சியில் ஜமுனாமரத்தூர் ஊராட்சி ஒன்றிய தலைவர் ஜீவாமூர்த்தி தலைமை தாங்கி ஏரியில் பூத்தூவி ரிப்பன் வெட்டி படகு சவாரியை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் கோவிலூர் ஊராட்சி மன்ற தலைவர் நடேசன், துணைத்தலைவர் தேவராஜ் மற்றும் பலர் கலந்து கொண்டனர். 8 மாதங்களுக்கு பிறகு கோலப்பன் ஏரியில் சுற்றுலா பயணிகள் உற்சாகமாக படகு சவாரி செய்தனர்.