உப்பாறு அணைக்கு தண்ணீர் திறக்கக்கோரி விவசாயிகள் மண்டியிட்டு போராட்டம்
தாராபுரம் அருகே உள்ள உப்பாறு அணைக்கு தண்ணீர் திறக்கக்கோரி விவசாயிகள் மண்டியிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
குண்டடம்,
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே உள்ள உப்பாறு அணைக்கு தண்ணீர் திறக்கக்கோரி திருப்பூர் மாவட்ட உப்பாறு பாசன விவசாயிகள் சங்கத்தினர் கடந்த 8-ந் தேதி முதல் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் விவசாயிகள், பெண்கள் குழந்தைகள் உள்பட 200-க்கும் மேற்பட்டவர்கள் கால்களை மடித்து மண்டியிட்டு நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இது குறித்து விவசாயிகள் கூறியதாவது:-
மிகப்பெரிய அளவில்...
திருமூர்த்தி அண்மையிலிருந்து பி.ஏ.பி. பிரதான வாய்க்காலில் அரசூர் ஷட்டர் வழியாக உப்பாறு அணைக்கு உடனடியாக தண்ணீர் திறக்க வேண்டும் என கடந்த 10 நாட்களாக பல்வேறு கட்டப் போராட்டங்கள் நடத்தியும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் விவசாயிகள் மீது இரக்கம் காட்டவில்லை. இதன் காரணமாக வரும் நாட்களில் தமிழகமே திரும்பி பார்க்கும் வகையில் அனைத்து கட்சியினரையும் இணைத்து மிகப் பெரிய அளவில் போராட்டமாக எடுத்துச்செல்ல உள்ளோம்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.