வேலூர் அரசு மருத்துவமனையில், முருகன் உண்ணாவிரதத்தை முடித்துக்கொண்டார்
வேலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் முருகன் தனது உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டார்.
உண்ணாவிரதம்
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் வேலூர் மத்திய சிறையில் கடந்த 29 ஆண்டுகளாக ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் முருகன், தனது தாய் மற்றும் உறவினர்களுடன் வாட்ஸ்அப் வீடியோ காலில் பேச அனுமதிக்க கோரி கடந்த 25 நாட்களாக சிறையில் உண்ணாவிரதம் மேற்கொண்டு வந்தார்.
இந்த நிலையில் முருகனின் உடல்நிலை பாதிக்கப்பட்டதால் அவரை மருத்துவமனையில் அனுமதிக்க வேண்டும் என்று டாக்டர்கள் பரிந்துரைத்தனர். அதன்படி முருகன் கடந்த 15-ந் தேதி இரவு சுமார் 7.15 மணி அளவில் வேலூர் மத்திய சிறையில் இருந்து பலத்த போலீஸ் காவலுடன் அடுக்கம்பாறையில் உள்ள வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். அங்கு அவருக்கு ஈ.சி.ஜி., ரத்தத்தில் சர்க்கரை அளவு உள்பட உடல் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது.
மருத்துவமனையில் அனுமதி
பரிசோதனை முடிவில் ‘நார்மல்’ என வந்ததால் முருகன் மீண்டும் சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அன்று இரவு மீண்டும் உடல்நிலை மோசமானதால் 11 மணி அளவில் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
முருகன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையிலும் தனது உண்ணாவிரத்தை தொடர்ந்து வந்தார். தொடர் உண்ணாவிரதத்தில் உள்ள முருகனிடம் அவரின் உடல்நிலையை எடுத்து கூறி உண்ணாவிரதத்தை கைவிடுமாறு டாக்டர்கள் கேட்டுக்கொண்டனர்.
உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டார்
இதையடுத்து நேற்று காலை 11 மணிக்கு இளநீர் குடித்து தனது உண்ணாவிரதத்தை முருகன் முடித்துக்கொண்டார். மேலும் உடனடியாக உணவு கொடுக்க முடியாது என்பதால் முதலில் பழ வகைகளை உட்கொள்ள அறிவுறுத்தியுள்ளனர்.
தற்போது பழ வகைகள், பழச்சாறுகள் மற்றும் இளநீர் மட்டுமே அவர் சாப்பிட்டு வருகிறார். நேற்று அவருக்கு கண், இதயம், நரம்பு உள்ளிட்ட பரிசோதனைகளும் செய்யப்பட்டது.
இந்த நிலையில் நேற்று மாலை அவர் ஆஸ்பத்திரியில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு மீண்டும் வேலூர் மத்திய ஜெயிலில் அடைக்கப்பட்டார்.