எடப்பாடி பழனிசாமி தலைமையில் மீண்டும் ஆட்சி அமையும் விஜிலா சத்யானந்த் எம்.பி. பேச்சு

பெண்களுக்காக ஆட்சி செய்த ஜெயலலிதாவின் ஆட்சி எடப்பாடி பழனிசாமி தலைமையில் மீண்டும் அமைவது உறுதி என்று சுசீந்திரத்தில் நடந்த கூட்டத்தில் விஜிலா சத்யானந்த் எம்.பி. பேசினார்.;

Update: 2020-12-18 04:42 GMT
சுசீந்திரம், 

சுசீந்திரம் பேரூராட்சிக்கு உட்பட்ட அ.தி.மு.க. மகளிர் வாக்குச்சாவடி முகவர்களுக்கான ஆலோசனை கூட்டம் சுசீந்திரம் அக்கரையில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் நேற்று இரவு நடைபெற்றது. இந்த கூட்டத்துக்கு தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய்சுந்தரம் தலைமை தாங்கி பேசுகையில் கூறியதாவது:-

சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவிலில் மார்கழி பெருந்திருவிழாவை யொட்டி 9-ம் திருவிழா அன்று தேரோட்டம் நடத்த முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அனுமதி வழங்கி உள்ளார். இந்த ஆண்டு சுசீந்திரம் கோவில் தேரோட்டம் பக்தர்களின் விருப்பத்துக்கு இணங்க சிறப்பாக நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது என்றார்.

விஜிலா சத்யானந்த் எம்.பி.

இந்த கூட்டத்துக்கு மாவட்ட செயலாளர் எஸ்.ஏ. அசோகன், அகஸ்தீஸ்வரம் ஒன்றிய செயலாளர் அழகேசன், கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதி தேர்தல் பொறுப்பாளர்கள் முத்துகிருஷ்ணன், வக்கீல் சுந்தரம், மாவட்ட மீனவர் கூட்டுறவு சங்க துணைத்தலைவர் ஷாஜின்காந்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். சுசீந்திரம் பேரூர் செயலாளர் குமார் வரவேற்று பேசினார்.

இந்த கூட்டத்தில் அ.தி.மு.க. மகளிர் அணி மாநில செயலாளர் விஜிலா சத்யானந்த் எம்.பி. சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

மீண்டும் ஆட்சி

தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காகவும், முன்னேற்றத்திற்காகவும் அரும் பாடுபட்டு வருகிறார். இந்தியாவிலேயே அதிக சமூக நலத் திட்டங்களை நிறைவேற்றிய மாநிலம் தமிழ்நாடு தான். ஜெயலலிதா செய்த சாதனைகளை விட ஒருபடி மேலாக சாதனைகளை எடப்பாடிபழனிசாமி செய்து வருகிறார். அரசு பள்ளியில்படிக்கும் மாணவர்களுக்கு அரசு மருத்துவக்கல்லூரியில் 7.5 சதவீதம் இட ஒதுக்கீடு அளிக்கப்பட்டதன் மூலம் 403 பேர் மருத்துவப்படிப்பில் சேர்ந்து உள்ளனர். கிராமப்புறங்களில் 2 ஆயிரம் மினி கிளினிக் தொடங்கப்பட உள்ளது. பெண்களுக்காக ஆட்சி செய்த ஜெயலலிதாவின் ஆட்சி எடப்பாடி பழனிசாமி தலைமையில் மீண்டும் அமைவது உறுதி.

இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில் மாவட்ட மகளிர் அணி செயலாளர் ஹெப்சிபாய், வர்த்தக அணி செயலாளர் ஜெஸீம், மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளர் சுகுமாரன், டாஸ்மாக் அண்ணா தொழிற்சங்க நிர்வாகி மணிகண்டன், அ.தி.மு.க .தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகிகள் கந்தன், குமரகுரு, நிர்வாகிகள் நீலாம்பரன், குருசாமிஉள்பட பலர் கலந்து கொண்டனர்.

அஞ்சுகிராமம்-மயிலாடி

இதேபோல் அ.தி.மு.க. மகளிர் வாக்குச்சாவடி முகவர்களுக்கான ஆலோசனை கூட்டம் அஞ்சுகிராமம், மயிலாடி, மருங்கூரில் நடந்தது. இந்த கூட்டங்களில் பேரூர் செயலாளர் ராஜபாண்டியன், முன்னாள் பேரூராட்சி தலைவி ஜெயந்தி நாராயணன், மயிலாடி பேரூர் செயலாளர் மனோகரன், பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்க தலைவர் பெருமாள், மருங்கூர் பேரூர் செயலாளர் சீனிவாசன, இரவி புதூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி தலைவி லட்சுமி சீனிவாசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்