பூதலூர் பகுதியில் செல்போன் பறிப்பில் ஈடுபட்ட 2 பேர் கைது மோட்டார் சைக்கிள் பறிமுதல்

பூதலூர் பகுதியில் செல்போன் பறிப்பில் ஈடுபட்ட 2 பேரை போலீசார் கைது செய்தனர். இவர்களிடம் இருந்து மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டது.;

Update: 2020-12-18 04:12 GMT
திருக்காட்டுப்பள்ளி,

தஞ்சை மாவட்டம் பூதலூர் ஜீவா நகரை சேர்ந்தவர் சக்திவேல் (வயது56). இவர் நேற்று முன்தினம் இரவு பூதலூர் மேம்பாலத்தின் வடக்கு பகுதியில் நின்று கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் சக்திவேலின் கையில் இருந்த செல்போனை பறித்துக்கொண்டு தப்பி சென்றனர். இவர்கள் அகிலாண்டேஸ்வரி நகர் பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணிடமும் செல்போனை பறித்து சென்றுள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்த பூதலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகேசன், சப்-இன்ஸ்பெக்டர் விஜயகுமார் மற்றும் போலீசார் அந்த பகுதிக்கு விரைந்து சென்று கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகள் மூலமாக விசாரணை நடத்தினர்.

இதனை தொடர்ந்து செங்கிப்பட்டி சாலையில் வாகன சோதனை மேற்கொண்டனர். அப்போது ஆவாரம்பட்டி பிரிவு சாலை அருகே மோட்டார் சைக்கிளில் சென்ற 2 பேரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் 2 பேரும் சக்திவேலிடமும், அகிலாண்டேஸ்வரி நகர் பகுதியில் நின்று கொண்டிருந்த பெண்ணிடமும் செல்போன்களை பறித்து சென்றது தெரியவந்தது.

மோட்டார் சைக்கிள் பறிமுதல்

மேலும் அவர்கள் திருவையாறு அருகே உள்ள ஆவிக்கரை கிராமத்தை சேர்ந்த அகிலன் (20), நெய்தலூர் கிராமம் காமாட்சி அம்மன் கோவில் தெருவை சேர்ந்த வினோத் (24) ஆகியோர் என்பது தெரியவந்தது.

இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து அகிலன், வினோத் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். இவர்களிடம் இருந்து 2 செல்போன்கள் மற்றும் அவர்கள் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிளையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

மேலும் செய்திகள்