தஞ்சை கீழவாசல், ரெயில்நகர் பகுதியில் தொடர் மழையால் சேறும், சகதியுமான சாலை மக்கள் கடும் அவதி
தஞ்சை கீழவாசல், ரெயில்நகர் பகுதியில் தொடர் மழையால் சேறும், சகதியுமாக சாலைகள் காட்சி அளிக்கிறது. இதனால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகி உள்ளனர்.
தஞ்சாவூர்,
தஞ்சை மாநகராட்சி பகுதியில் 51 வார்டுகள் உள்ளன. தற்போது பெய்து வரும் மழையினால் சாலைகள் சேதம் அடைந்து வருகின்றன. இதில் மாநகராட்சி சாலைகள், மாநில நெடுஞ்சாலைகள் உள்ளிட்டவைகள் சேதம் அடைந்துள்ளன. இந்த நிலையில் பல்வேறு சாலைகளில் பாதாள சாக்கடை இணைப்புக்காக தோண்டப்பட்ட குழியாலும் சாலைகள் சேதம் அடைந்து காணப்படுகின்றன.
மழையினால் சாலைகள் சேறும், சகதியுமாக காட்சி அளிக்கிறது. குறிப்பாக தஞ்சை சீனிவாசபுரம் பகுதியில் பல்வேறு சாலைகள் இதே போல் சேதம் அடைந்து காணப்படுகின்றன. தஞ்சை எம்.கே.எம். மூப்பனார் சாலையும் குண்டும், குழியுமாக காட்சி அளிக்கிறது. விரிவாக்க நகர் பகுதியில் உள்ள சாலைகளின் நிலையும் படுமோசமாக உள்ளது.
சேறும், சகதியுமாக....
தஞ்சை 13-வது வார்டில் உள்ளது டவுன்கரம்பை. இந்த டவுன் கரம்பைக்கு செல்லும் சாலையில் இருந்து பிரியும் இடத்தில் எஸ்.டி.எம். நகர், காவேரி நகர் உள்ளது. இந்த பகுதியில் ஏராளமான வீடுகள் உள்ளன. இந்த பகுதிகளுக்கு செல்லும் சாலைகள் தற்போது சேறும், சகதியுமாக காட்சி அளிக்கிறது. பல்வேறு சாலைகளில் மழைநீர் வடிவதற்கு வழியில்லாமல் தேங்கி காணப்படுகிறது.
இதனால் இந்த பகுதியில் உள்ள மக்கள் வீடுகளை விட்டு வெளியே வருவதற்கு அச்சப்படும் நிலை உள்ளது. காரணம் வெளியே செல்ல வேண்டும் என்றால் தேங்கி நிற்கும் மழைநீர் மற்றும் சேற்றை கடந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது. இந்த பகுதியில் ஆட்டோக்கள், கார் மற்றும் இருசக்கர வாகனங்களில் தான் செல்லும் நிலை உள்ளது. இருசக்கர வாகனங்களில் செல்லும் போது சில நேரங்களில் தடுமாறி சேற்றில் விழுந்தும் விடுகிறார்கள்.
சீரமைக்க வேண்டும்
இதே போல் தஞ்சை மாநகராட்சி 36-வது வார்டில் ரெயில்நகர் உள்ளிட்ட விரிவாக்க பகுதிகளுக்கு செல்லும் சாலைகளும் சேறும், சகதியுமாக காட்சி அளிக்கிறது. பல ஆண்டுகளாக இந்த சாலைகள் போடப்படாமல் உள்ளது. இதனால் இந்த பகுதி மக்களும் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே சேறும், சகதியுமாக காணப்படும் இந்த சாலைகளை சீரமைப்பதோடு, தார்சாலைகள் போட்டுத்தர வேண்டும் என்று அந்த பகுதி பொதுமக்கள் கேட்டுக்கொண்டு உள்ளனர்.
திருக்காட்டுப்பள்ளி சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த 2 நாட்களாக விட்டு விட்டு மழை பெய்தது. இதன் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. கல்லணையில் இருந்து காவிரி, வெண்ணாறு, கல்லணைக்கால்வாயில் தண்ணீர் திறக்கப்படவில்லை. பிரதான ஆறுகள் மற்றும் வாய்க்கால்களில் தண்ணீர் இல்லாததால் நெல் வயல்களில் தண்ணீர் தேங்கவில்லை. தொடர் மழை காரணமாக பூதலூர் ஒன்றியத்தில் பல்வேறு கிராமங்களில் தெருக்களில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. இதை வடியவைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கிறார்கள்.