ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே, 350 கிலோ சந்தன கட்டைகள் பறிமுதல்; வனத்துறை அதிகாரியிடம் தீவிர விசாரணை
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே 350 கிலோ சந்தன கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பாக வனத்துறை அதிகாரியிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
வனத்துறையினர் சோதனை
ஸ்ரீவில்லிபுத்தூர் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ளது பந்தப்பாறை. இந்த பகுதியில் ஸ்ரீவில்லிபுத்தூரை சேர்ந்த கோவை மாவட்டம் கொழுமம்பட்டி வனச்சரகத்தில் வன அலுவலராக பணிபுரியும் ஆரோக்கியசாமியின் தோட்டம் உள்ளது. இவரது தோட்டத்தில் சந்தன மரக்கட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக வனத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதைத்தொடர்ந்து மாவட்ட வன உதவி அலுவலர் அல்லி ராஜ் தலைமையில் ரேஞ்சர் அன்னக்கொடி மற்றும் வனத்துறையினர் 15 பேர் குழுவினர் மோப்பநாய் சிமி உதவியுடன் அந்த தோட்டத்திற்கு சென்று திடீர் சோதனை மேற்கொண்டனர்.
350 கிலோ சந்தன கட்டைகள்
அப்போது தோட்டத்தில் உள்ள ஒரு கட்டிடத்தில் சுமார் 350 கிலோ சந்தன கட்டைகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த சந்தன கட்டைகளின் மதிப்பு பல லட்சம் இருக்கலாம் எனக்கூறப்படுகிறது. இதையடுத்து வனத்துறை அதிகாரிகள் அந்த சந்தன மரக்கட்டைகளை பறிமுதல் செய்து ஸ்ரீவில்லிபுத்தூர் வனத்துறை அலுவலகத்திற்கு கொண்டு சென்றனர்.
மேலும், இது தொடர்பாக வனத்துறை அதிகாரி ஆரோக்கியசாமியிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். வனத்துறை அதிகாரிக்கு சொந்தமான தோட்டத்தில் பல லட்சம் மதிப்பிலான சந்தன கட்டைகள் கைப்பற்றப்பட்டுள்ளது வனத்துறையினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.