மன்னார் வளைகுடா கடலில் கடத்தலை தடுக்க 4 கப்பல்கள் தீவிர ரோந்து

மன்னார் வளைகுடா கடலில் கடத்தலை தடுக்க 4 கப்பல்கள் தீவிர ரோந்து பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளன.

Update: 2020-12-18 03:01 GMT
பாம்பன் அருகே உள்ள தீவு பகுதியில் நேற்று இந்திய கடலோர காவல் படையின் ஹோவர் கிராப்ட் கப்பல் ரோந்து பணியில்
கடல் வழியாக கடத்தல்
தமிழகத்தில் ராமேசுவரம் கடல் பகுதி மிக முக்கியமானது. அதற்கு முக்கிய காரணம் இலங்கை கடல் பகுதி மிக அருகாமையில் இருப்பதுதான். தங்கக்கட்டிகள், கடல் அட்டைகள், கஞ்சா, பீடி இலை, மஞ்சள் மற்றும் போதை பொருட்கள் இந்த கடல் பகுதி வழியாக அவ்வப்போது கடத்தப்படுகின்றன. ஒரு வாரத்திற்கு முன்பு கூட இலங்கையில் இருந்து மன்னார் வளைகுடா கடல் பகுதி வழியாக கடத்தல்காரர்கள் மூலம் கடத்தி கொண்டு வரப்பட்ட 9 கிலோ தங்கத்தை மண்டபம் அருகே உள்ள மனோலி தீவு கடல் பகுதியில் இந்திய கடலோர காவல் படையினர் பறிமுதல் செய்ததுடன், 5 பேரை கைது செய்தனர்.

4 கப்பல்கள்
எனவே இலங்கையில் இருந்து மன்னார் வளைகுடா கடல் வழியாக நடைபெறும் கடத்தலை தடுப்பதற்காக இந்திய கடலோர காவல் படையினர் உஷார்படுத்தப்பட்டு உள்ளனர். மண்டபத்தில் உள்ள இந்திய கடலோர காவல்படைக்கு சொந்தமான சி-432, சி-431 என இரண்டு அதிவேக ரோந்து கப்பல்கள் மற்றும் தரையிலும் தண்ணீரிலும் அதிவேகமாக செல்லும் 2 ஹோவர் கிராப்ட் கப்பல்கள் என 4 கப்பல்கள் பாம்பன், ராமேசுவரம், தனுஷ்கோடி வரையிலான மன்னார் வளைகுடா கடல் பகுதியில் இரவு-பகலாக தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றன.

அந்த கப்பல்களில் இருந்தபடி இந்திய கடலோர காவல்படையினர் நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த நாட்டுப் படகு மற்றும் விசைப்படகு மீனவர்களிடம் சந்தேகப்படும்படியான நபர்கள் மற்றும் படகுகளையோ கண்டால் உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளனர்.

மேலும் செய்திகள்