கொரோனாவை சிறப்பாக கட்டுப்படுத்தியது குறித்து சீனா, பிரேசில், ரஷ்யா போன்ற நாடுகள் தமிழக அரசிடம் ஆலோசனை கேட்டன; அமைச்சர் செல்லூர் ராஜூ பெருமிதம்
கொரோனாவை சிறப்பாக கட்டுப்படுத்தியது குறித்து சீனா, பிரேசில், ரஷ்யா போன்ற நாடுகள் தமிழக அரசிடம் ஆலோசனை கேட்டன என்று அமைச்சர் செல்லூர் ராஜூ கூறினார்.
அம்மா கிளினிக்
மதுரை மேற்கு தாலுகா துவரிமான் மற்றும் கொடிமங்கலம் கிராமங்களில் மக்கள் நல்வாழ்வுமற்றும் குடும்பநலத்துறை மூலம் முதல்-அமைச்சரின் அம்மா மினி கிளினிக்கை அமைச்சர் செல்லூர் ராஜூ நேற்று தொடங்கி வைத்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
தமிழக மருத்துவ வரலாற்றில் சாதனை மட்டுமல்ல. மற்ற மாநிலங்களுக்கு வழிகாட்டும் திட்டமாகும். அம்மா குடிநீர், உணவகம், சிமெண்டு, அம்மா கூட்டுறவு மருந்தகம் போன்றவற்றை தொடர்ந்து அம்மா மினி கிளினிக்கும் அடிதட்டுமக்களின் அத்தியாவசிய திட்டமாகும். தனியார் மருத்துவமனைகளில் கிடைக்கக்கூடிய சிகிச்சைக்கு நிகரான சிகிச்சை இங்கு அளிக்கப்படும். கொரோனா காட்டு தீயாக பரவியபோது அதனை வெற்றிகரமாக கட்டுப்படுத்தியதில் தமிழகம் குறிப்பிடத்தக்கது.
இந்தியாவிலேயே அதிகமாக கொரோனா பரிசோனை மேற்கொள்ளப்பட்ட மாநிலம் தமிழகம் தான். 310 அரசுமருத்துவமனை, 341 தனியார் மருத்துவமனை என 651 மருத்துவமனைகளில் படுக்கை வசதியுடன் கொரோனாவை கட்டுக்குள் வைத்த பெருமை தமிழகத்திற்கு உண்டு. அனைத்து மாவட்டங்களிலும் மருத்துவகல்லூரி நிறுவப்பட்டு, மருத்துவர்கள், செவிலியர்கள், ஏனைய சுகாதாரபணியாளர்கள் என சு காதார கட்டமைப்பில் தமிழகம் முன்னிலையில் உள்ளது.
மருத்துவ சுற்றுலா
மதுரையில் சுமார் ரூ.1,300 கோடியில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைய உள்ளது. அரசு மருத்துவமனை மல்டி ஸ்பெஷலிட்டி மருத்துவ மனையாக தரம் உயர்ந்துள்ளது. தமிழ்நாட்டில் தான் அதிகமான மருத்துவ கல்லூரிகள் உள்ளன. ஒரே ஆண்டில் 11 மருத்துவ கல்லூரிகள் ரூ.1,200 கோடியில் தொடங்கப்பட்டுள்ளன. இதனால் 1,650 இடங்கள் கூடுதலாக கிடைத்துள்ளன. கடந்த2011-ம் ஆண்டு வரை 1,945 மருத்துவ இடங்கள் மட்டுமே இருந்தன. தற்போது 5,300 பேர் மருத்துவம் படிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
தற்போது 2 ஆயிரம் அம்மா மினி கிளினிக்குகள் தொடங்கப்பட்டுள்ளன. நாட்டிலேயே அதிகபட்சமாக 99.9 பிரசவங்கள் மருத்துவமனையில் நடைபெறும் மாநிலம் தமிழ்நாடு. பேறுகால இறப்பை பொறுத்தவரை 2030-ம் ஆண்டு அடைய வேண்டிய இலக்கினைநாம் இப்போதே எட்டிவிட்டோம்.
ஆலோசனை
குழந்தைகள் இறப்புவிகிதம் இந்தியாவில் 10 சதவீதம். ஆனால் தமிழ்நாட்டில் 5.5 சதவீதம் மட்டுமே. உடல் உறுப்புகள் அறுவை சிகிச்சையில் தமிழகத்திற்கு கடந்த 5 ஆண்டுகளாக தொடர்ந்து தேசிய விருது கிடைத்து வருகிறது. உடல் தானத்தில் தொடர்ந்து 6-வது முறையாக தமிழகம் முதலிடத்தில் உள்ளது. தமிழகத்தில் 1 கோடியே 58 லட்சம் பேருக்கு காப்பீடு அட்டை வழங்கப்பட்டுள்ளது. அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீதம் மருத்துவ படிப்பு வழங்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. இதனால் 313 மாணவர்களுக்கு சீட் கிடைத்துள்ளது. பிரேசில், சீனா, தென்னாப்பிரிக்கா, ரஷ்யா ஆகிய நாடுகள், தமிழக அரசின் சுகாதாரத்துறையிடம் கொரோனாவை எப்படி சிறப்பாக கட்டுப்படுத்தினீர்கள் என்பது குறித்து காணொலி மூலம் ஆலோசனைகள் கேட்டனர். இது நமக்கெல்லாம் பெருமை அல்லவா?.
இவ்வாறு அவர் பேசினார்.