பள்ளிகள் திறப்பு எப்போது? எடப்பாடி பழனிசாமி பேட்டி
பள்ளிகள் திறப்பு எப்போது? என்பது குறித்து பெரம்பலூரில் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
பெரம்பலூர்,
பெரம்பலூரில் கொரோனா தடுப்பு ஆய்வு கூட்டம் மற்றும் புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில் பங்கேற்க வந்த முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:-
கேள்வி:- தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி எப்போது போடப்படும்?
பதில்:- கொரோனா தடுப்பூசி மத்திய அரசு தான் கொடுக்க வேண்டும். தமிழக அரசை பொறுத்தவரை கொரோனா தடுப்பூசி கண்டுபிடித்தவுடன் அனைவருக்கும் இலவசமாக போடப்படும்.
கேள்வி:- பெரம்பலூர் மாவட்டத்துக்கு மேட்டூர் உபரி நீர் திட்டம், காவிரி வாய்க்கால் திட்டம் கொண்டு வரப்படுமா?
பதில்:- ஒவ்வொரு பகுதியாக அரசாங்கம் உபரி நீரை பயன்படுத்த வேண்டும் என்ற திட்டம் போட்டு செயல்படுத்தி வருகிறது. காவிரி-குண்டாறு திட்டம் ரூ.14 ஆயிரம் கோடியில் 5 ஆண்டுகள் காலம் திட்டமாக எடுத்து கொண்டு செயல்படுத்த உள்ளோம். விரைவாக அந்த திட்டத்திற்கு அடிக்கல் நாட்டப்படும். அதற்கு ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டுள்ளது. கோதாவரி-காவிரி இணைப்புக்கு முயற்சி செய்து வருகிறோம். இந்த திட்டத்திற்கு ஆந்திரா, தெலுங்கானா மாநில முதல்-மந்திரிகள் ஒத்துழைப்பு தருவதாக சொல்லியிருக்கிறார்கள். இந்த திட்டம் வரும் போது, மேற்கண்ட திட்டங்களை சிந்திக்கலாம். தமிழகத்தில் இதுவரைக்கும் ரூ.1,500 கோடி குடிமராமத்து பணிகளுக்கு செலவிடப்பட்டுள்ளது.
எம்.ஜி.ஆர்.பெயர்
கேள்வி:- நடிகர் கமல்ஹாசன் தொடர்ச்சியாக எம்.ஜி.ஆர். பெயரை பயன்படுத்தி வருகிறார்?
பதில்:- எல்லா தலைவர்களும் எம்.ஜி.ஆர். பெயரை சொன்னால் தான் ஓட்டு கிடைக்கும் என்று அவரே ஒத்துக்கொள்கிறார். அவருக்கு தனி செல்வாக்கு இல்லை. ஆனால் அ.தி.மு.க. எம்.ஜி.ஆரால் உருவாக்கப்பட்ட இயக்கம். ஆகவே எம்.ஜி.ஆர். பெயரை பயன்படுத்த தகுதி அ.தி.மு.க.வுக்கு மட்டுமே உள்ளது. எம்.ஜி.ஆர். பெயரை மற்றவர்கள் உரிமை கொண்டாடுவதற்கு தார்மீக உரிமை இல்லை.
கேள்வி:- அரசு பள்ளிகளில் பாடத்திட்டங்கள் குறைக்கப்படுவதானால், அடுத்த ஆண்டு நீட் தேர்வு எழுதும் மாணவர்கள் கஷ்டப்படமாட்டார்களா?
பதில்:- இதனை மத்திய அரசின் கவனத்திற்கு கொண்டு செல்வோம். இப்போதைக்கு உயிர் தான் முக்கியம். சில மாவட்டத்தில் கொரோனா வைரஸ் அதிகமாக இருக்கு. ஒவ்வொருவருக்கும், அவர்களது குழந்தைகளே முக்கியம். படிப்பு அப்புறம் தான். அந்த அடிப்படையில் பள்ளி திறப்பதற்கு நாங்கள் ஏற்கனவே பெற்றோர்-ஆசிரியர்களிடம் கருத்து கேட்டோம். அவர்களும், எதிர்க்கட்சி தலைவர்களும் வேண்டாம் என்று சொன்னார்கள். அதனால் பள்ளிகள் திறப்பதை தள்ளி வைத்திருக்கிறோம். கொரோனா தொற்று குறைகின்ற போது பள்ளிகள் திறக்கப்படும். இது சாதாரண விஷயம் இல்லை. உயிர் சம்பந்தப்பட்ட விஷயம். மிக கவனமாக எச்சரிக்கையுடன் இதை அரசு கையாளும்.
பள்ளிகள் திறப்பு எப்போது?
கேள்வி:- அரசு பள்ளி மாணவர்களுக்கு தேர்வு நடத்த தடை விதித்தும், தனியார் பள்ளிகளில் தேர்வு நடத்த அனுமதியளிக்கப்பட்டுள்ளதே?
பதில்:- படிப்பு என்பது முக்கியம். அதைவிட உயிர் என்பது முக்கியம். இரண்டையும் பார்க்க வேண்டும். அரசாங்கத்தை பொறுத்தவரை அரசு பள்ளிகளை தான் பார்க்க முடியும். அரசு பள்ளிகளில் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். பெற்றோர்களின் எண்ணத்தை அறிந்து தான் பள்ளிகள் திறக்க முடியும். அது தான் எங்களுடைய நோக்கம். பெற்றோர்களுடைய கருத்து கேட்டோம். அவர்கள் குழந்தைகளை பள்ளிகளுக்கு அனுப்ப மறுத்தார்கள். அதனால் தான் பள்ளிகள் திறக்க வாய்ப்பில்லாமல் நிறுத்தி வைத்துள்ளோம். மீண்டும் கொரோனா வைரஸ் தொற்று மற்ற மாவட்டங்களில் குறைகின்ற போது பள்ளிகளை திறப்பது குறித்து பெற்றோர்களிடம் கருத்து கேட்கப்படும். அவர்கள் இசைவு அளித்தால் பள்ளிகள் திறக்கப்படும். இவ்வாறு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.