மதுரை 2-வது தலைநகரமாக மாற்றப்படுமா? ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. விளக்கம்
திருப்பரங்குன்றம் பஞ்சாயத்து யூனியனுக்கு உட்பட்ட சாக்கிலிப்பட்டி, பாராபத்தி ஊராட்சிகளில் அம்மா மினி கிளினிக் திறப்பு விழா நடைபெற்றது.
விழாவிற்கு மதுரை புறநகர் அ.தி.மு.க. கிழக்கு எம்.ஜி.ஆர். இளைஞரணி மாவட்ட செயலாளர் வக்கீல் ரமேஷ், ஒன்றிய செயலாளர் நிலையூர் முருகன், எம்.ஜி.ஆர். மன்ற மாவட்ட செயலாளர் ஓ.எம்.கே. சந்திரன், விவசாய பிரிவு மாவட்ட செயலாளர் கருத்தகண்ணன், இளைஞரணி மாவட்ட இணை செயலாளர் புருஷோத்தம்மன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் சிறப்பு அழைப்பாளராக மதுரை புறநகர் அ.தி.மு.க. கிழக்கு மாவட்ட செயலாளர் ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. கலந்து கொண்டு மினி கிளிக்கை குத்து விளக்கு ஏற்றி திறந்து வைத்து பேசினார். அப்போது அவர் பேசியதாவது, 60 வயது நிரம்பியவர்கள் மகன் இல்லாதபட்சத்தில் முதியோர் உதவித்தொகை பெறுவதற்கு மனு கொடுக்கலாம். 10 நாளில் முதியோர் உதவித்தொகை கிடைக்கும் என்று பேசினார். இதைதொடர்ந்து அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது, இரண்டாவது தலைநகரமாக மதுரையை அறிவிப்பது குறித்து அரசு முடிவெடுக்கவில்லை என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஏற்கனவே தெளிவாக கூறியுள்ளார். இப்போதைக்கு மதுரையை இரண்டாம் தலைநகரமாக மாற்ற அவசியம் இல்லை. எய்ம்ஸ் மருத்துவமனைக்கு நிலம் ஒதுக்கப்பட்டு விட்டது. ஆனால் சிலர் தவறான பிரசாரத்தை செய்து வருகின்றனர். தலைவர்களாக உருவாக தியாகங்கள் செய்திருக்க வேண்டும். சினிமாவில் கமல்ஹாசனும், ரஜினிகாந்தும் ஹீரோவாக இருக்கலாம். ஆனால் தியாக பட்டியலில் ஜீரோ. இவ்வாறு அவர் கூறினார்.
விழாவில் மாவட்ட துணைசெயலாளர் முத்துக்குமார், பகுதி துணை செயலாளர் செல்வக்குமார், இளைஞரணி ஒன்றிய செயலாளர் ராஜாக்கண்ணன், வட்ட செயலாளர்கள் திருநகர்பாலமுருகன், பொன்முருகன், எம்.ஆர்.குமார், மரக்கடை முருகேசன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.