தென்காசி அருகே, கல்லூரி மாணவர் விஷம் குடித்து தற்கொலை

தென்காசி அருகே கல்லூரி மாணவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2020-12-18 00:55 GMT
தென்காசி,

தென்காசி அருகே பாட்டப்பத்து காளியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் மாரியப்பன். இவருடைய மகன் ராஜகோபால் (வயது 21). இவர் தென்காசியில் உள்ள தனியார் கல்லூரியில் பி.பி.ஏ. இறுதி ஆண்டு படித்து வந்தார். தற்போது கல்லூரிகளில் இறுதியாண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் நடைபெற்று வருகிறது. இதனால் ராஜகோபால் தினமும் கல்லூரிக்கு சென்று வந்தார்.

இந்த நிலையில் கல்லூரியில் கட்டணம் செலுத்த வேண்டியிருப்பதாக ராஜகோபால் பெற்றோரிடம் தெரிவித்தார். மேலும் தனக்கு மடிக்கணினியும் தேவைப்படுவதாக கூறினார். ஆனால் தற்போது தங்களிடம் பணம் இல்லை என்றும், பிறகு பணம் தருவதாகவும் பெற்றோர் கூறினர்.

இதனால் மனமுடைந்த ராஜகோபால் நேற்று முன்தினம் மதியம் வீட்டில திடீரென்று விஷம் குடித்து மயங்கிய நிலையில் கிடந்தார். உடனே அவரை தென்காசி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்து தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனாலும் சிகிச்சை பலனின்றி ராஜகோபால் பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து குற்றாலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுரேஷ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். கல்லூரி மாணவர் விஷம் குடித்து தற்கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்