பாவூர்சத்திரம் அருகே, தொழிலாளி கொலை வழக்கில் நண்பர் கைது - பரபரப்பு வாக்குமூலம்
பாவூர்சத்திரம் அருகே தொழிலாளி கொலை வழக்கில் நண்பரை போலீசார் கைது செய்தனர். அவர் போலீசாரிடம் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.;
பாவூர்சத்திரம்,
கடையம் அருகே கல்யாணிபுரம் நல்வாழ்வு ஆசிரம தெருவைச் சேர்ந்தவர் மாரியப்பன். இவருடைய மகன் சுடலைமணி (வயது 27). இவர் பாவூர்சத்திரத்தில் உள்ள இறைச்சி கடையில் தொழிலாளியாக வேலை செய்து வந்தார். இவர் கடந்த 14-ந்தேதி காலையில் பாவூர்சத்திரம் அருகே ஆவுடையானூர் மாடியனூரில் உள்ள தோட்டத்தில் தலையில் கல்லை தூக்கிப்போட்டு கொலை செய்யப்பட்டு கிடந்தார்.
இதுகுறித்து பாவூர்சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். கொலையாளியை பிடிப்பதற்காக போலீசார் 4 தனிப்படைகள் அமைத்து வலைவீசி தேடி வந்தனர்.
போலீசாரின் விசாரணையில், சுடலைமணியை கொலை செய்தது, அவருடைய நண்பரான பாவூர்சத்திரம் அருகே ஆவுடையானூர் ஆவுடைசிவன்பட்டி தெருவைச் சேர்ந்த சுப்பிரமணியன் மகன் சுலைமான் (24) என்பது தெரியவந்தது. இதையடுத்து சுலைமானை போலீசார் நேற்று கைது செய்தனர்.
அவர் போலீசாரிடம் பரபரப்பு வாக்குமூலம் அளித்து உள்ளார். அதன் விவரம் வருமாறு:-
பாவூர்சத்திரத்தில் சுடலைமணி பணியாற்றும் தெருவின் அருகில் வசித்து வந்தேன். நானும், சுடலைமணியும் நண்பர்களாக பழகி வந்தோம். கடந்த 13-ந்தேதி இரவில் நாங்கள் 2 பேரும் மாடியனூரில் உள்ள தோட்டத்தில் ஒன்றாக மதுகுடித்தோம். அப்போது மது போதையில் எங்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த நான் அங்கு கிடந்த பெரிய கல்லை எடுத்து சுடலைமணியின் தலையில் தூக்கிப்போட்டு கொலை செய்தேன்.
இவ்வாறு சுலைமான் வாக்குமூலம் அளித்து உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
கைதான சுலைமானை தென்காசி கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். கடந்த 2019-ம் ஆண்டு ஆவுடையானூரில் நடந்த பம்பு ஆபரேட்டர் தர்மராஜ் கொலை வழக்கிலும் சுலைமானுக்கு தொடர்பு இருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.