கியாஸ் சிலிண்டர் விலை உயர்வை வாபஸ்பெற வேண்டும் நாராயணசாமி வலியுறுத்தல்

கியாஸ் சிலிண்டர் விலை உயர்வை வாபஸ்பெற வேண்டும் என்று முதல்-அமைச்சர் நாராயணசாமி வலியுறுத்தினார்.

Update: 2020-12-18 00:47 GMT
புதுச்சேரி, 

புதுவை முதல்-அமைச்சர் நாராயணசாமி நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

சமையல் கியாஸ் சிலிண்டரின் விலை ஒரே மாதத்தில் 100 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. கச்சா எண்ணெய் விலை குறைந்துள்ள நிலையில் கியாஸ், பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து வருகிறது. காங்கிரஸ் ஆட்சியில் கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றுக்கு 130 டாலராக இருந்தபோது கியாஸ் சிலிண்டர் ரூ.350-க்கு விற்கப்பட்டது. ஆனால் இப்போது கச்சா எண்ணெய் பீப்பாய் 60 டாலர்கள்தான்.

இந்த நேரத்தில் விலைகளை உயர்த்தி மக்களுக்கு சுமையை ஏற்றுகிறார்கள். காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் பெட்ரோல், டீசல் விலையை லிட்டருக்கு ரூ.1 உயர்த்தினாலே பாரதீய ஜனதா போராட்டம் நடத்தும். இப்போது கியாஸ் விலையை கடுமையாக உயர்த்தி உள்ளனர். இந்த விலை உயர்வு பெருமளவு பாதிப்பினை ஏற்படுத்தும். இதுவரை 18 முறை கியாஸ் விலை உயர்த்தப்பட்டுள்ளது. இது மக்களுக்கு செய்யும் துரோகம். இந்த விஷயத்தில் பிரதமர் தலையிட்டு விலை உயர்வினை திரும்பப்பெற வேண்டும்.

விவசாயிகள் தங்களது நியாயமான கோரிக்கையை வலியுறுத்தி டெல்லியை முற்றுகையிட்டு கடுங்குளிரையும் பொருட்படுத்தாமல் போராட்டம் நடத்துகிறார்கள். பஞ்சாப், அரியானா போன்ற மாநிலங்கள் நாட்டிற்கு பெருமளவு கோதுமை தரும் மாநிலங்கள். விவசாயிகள் போராட்டம் தொடர்ந்தால் உணவுப்பொருள் தட்டுப்பாடு ஏற்படும்.

எனவே பிரதமர் விவசாயிகளை அழைத்துப்பேசி சுமூக முடிவு காணவேண்டும். இதுதொடர்பாக சுப்ரீம் கோர்ட்டும் உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. விவசாயிகளுக்கு ஆதரவாக புதுவையில் காங்கிரஸ் கூட்டணி கட்சிகள் சார்பில் அண்ணா சிலை அருகில் உண்ணாவிரத போராட்டம் நடத்தப்பட உள்ளது. மழை பெய்தாலும் இந்த போராட்டம் தொடரும்.

புதுவையில் தனியார் மருத்துவ கல்லூரிகளிடம் இருந்து 50 சதவீத இடஒதுக்கீட்டினை பெறுவதற்கான சட்டவரையறை தயார் செய்து கடந்த ஏப்ரல் மாதம் கவர்னருக்கு அனுப்பினோம். அதை 45 நாட்கள் தன்னிடம் வைத்துக்கொண்டு அதன்பின் மத்திய அரசுக்கு அவர் அனுப்பினார். மத்திய அரசின் சந்தேகங்களுக்கு பதில் அளித்தும் இதுவரை அதற்கு ஒப்புதல் வரவில்லை.

புதுவையில் 3 தனியார் மருத்துவக் கல்லூரிகளில் அரசுக்கு 50 சதவீத இடஒதுக்கீடு தர ஒப்புக்கொள்ளப்பட்டுதான் அனுமதி தரப்பட்டுள்ளது. ஆனால் 2 கல்லூரிகள் தங்களை சிறுபான்மையினர் கல்லூரி என்று கூறி சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பின் அடிப்படையில் 50 சதவீத இடங்களை தருவதில்லை. மற்றொரு கல்லூரியில் 50 சதவீதத்துக்கும் குறைவான இடங்களை பெற கடந்த என்.ஆர்.காங்கிரஸ் ஆட்சியில் ஒப்பந்தம் போட்டுள்ளனர். அதையே காரணம் காட்டி தற்போது மாணவர்கள் 50 சதவீத இடஒதுக்கீடு கேட்டு தொடர்ந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இருந்தபோதிலும் அரசு சார்பில் மேல்முறையீடு செய்வோம்.

இதேபோல் மருத்துவ படிப்பில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 10 சதவீத இடஒதுக்கீடு பெற அரசாணை வெளியிட நடவடிக்கை எடுத்தோம். ஆனால் அதற்கு கவர்னர் முட்டுக்கட்டை போட்டார். அதுதொடர்பான கோப்பினையும் மத்திய அரசுக்கு அனுப்பி வைத்துள்ளார். இதுதொடர்பாக அரசுப்பள்ளி மாணவி ஒருவர் ஐகோர்ட்டில் வழக்குப்போட்டுள்ளார். அதில் நல்ல முடிவு வரும் என்று எதிர்பார்க்கிறோம். இந்த இரு விஷயங்களிலும் எந்த முடிவு வந்தாலும் கோர்ட்டு தீர்ப்பின் அடிப்படையில் மாணவர் சேர்க்கை தொடர்பாக முடிவு எடுப்போம். இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்