ஏரியில் ஆகாயத்தாமரைகளை அகற்றுவதில், அ.தி.மு.க.-தி.மு.க.வினர் இடையே கடும் வாக்குவாதம்
ஏரியில் ஆகாயத்தாமரைகளை அகற்றுவதில் அ.தி.மு.க.-தி.மு.க.வினர் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து மாநகராட்சி ஊழியர்களே அகற்றியதால் அனைவரும் கலைந்து சென்றனர்.
ஆகாயத்தாமரைகள்
சென்னை மாநகராட்சி பெருங்குடி மண்டலத்துக்கு உட்பட்ட புழுதிவாக்கம் சித்தேரியில் மடிப்பாக்கம் பாலையா கார்டன் பகுதியில் ஆகாயத்தாமரைகள் அதிக அளவில் வளர்ந்து உள்ளன. தி.மு.க. சார்பில் நேற்று காலை ஆகாயத்தாமரைகள் அகற்றப்படும் என சென்னை தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் மா.சுப்பிரமணியன் எம்.எல்.ஏ. அறிவித்து இருந்தார்.
ஆனால் நேற்று காலை 8 மணிக்கு அ.தி.மு.க. முன்னாள் கவுன்சிலர் ஜெ.கே. மணிகண்டன் தலைமையில் மாநகராட்சி ஊழியர்கள், தன்னார்வ தொண்டர்கள் ஏரியில் உள்ள ஆகாயத்தாமரைகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.
இதற்கிடையில் ஏரியில் ஆகாயத்தாமரைகளை அகற்ற தி.மு.க. பகுதி செயலாளர் எஸ்.வி. ரவிசந்திரன் தலைமையில் தி.மு.க.வினர் படகுகளுடன் அங்கு வந்தனர்.
அ.தி.மு.க.-தி.மு.க. வாக்குவாதம்
அப்போது அ.தி.மு.க.வினர், ஏரிக்குள் இறங்கி ஆகாயத்தாமரைகளை அகற்றுங்கள். ஆனால் படகுகளை மட்டும் இறக்கக்கூடாது என எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் அ.தி.மு.க.- தி.மு.க.வினர் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
இதற்கிடையில் தி.மு.க. மாவட்ட செயலாளர் மா.சுப்பிரமணியன், அரவிந்த் ரமேஷ் எம்.எல்.ஏ., பாலவாக்கம் சோமு உள்ளிட்டோர் அங்கு வந்தனர். அதேபோல் அ.தி.மு.க. முன்னாள் கவுன்சிலர்கள் ஜெ.கே.ஜெயசந்திரன், குமார், தியாகராஜன் உள்பட அ.தி.மு.க.வினர் மற்றும் தி.மு.க. தொண்டர்கள் அதிகஅளவில் அங்கு குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
மாநகராட்சி ஊழியர்கள்
உடனடியாக அங்குவந்த மடிப்பாக்கம் போலீஸ் உதவி கமிஷனர் சவுரிநாதன், இன்ஸ்பெக்டர் ரவி மற்றும் போலீசார் தி.மு.க.வினரை கலைந்து போக செய்தனர்.
அப்போது மா.சுப்பிரமணியன் எம்.எல்.ஏ., “ஏரியை மாநகராட்சி ஊழியர்களே சுத்தம் செய்ய வேண்டும். அ.தி.மு.க.வினர் யாரும் ஈடுபடக்கூடாது” என்றார். அதை போலீசாரும் ஏற்றுக்கொண்டனர். பின்னர் ஏரியில் ஆகாய தாமரைகள் அகற்றும் பணிகளை மா.சுப்பிரமணியன் ஆய்வு செய்தார். அதன்பிறகு தி.மு.க.வினர் அங்கிருந்து சென்றனர். பின்னர் அ.தி.மு.க.வினரையும் போலீசார் கலைந்து போக செய்தனர்.
அதைதொடர்ந்து மாநகராட்சி ஊழியர்கள் மட்டும் ஏரியில் உள்ள ஆகாயத்தாமரைகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.