கொரோனா பேரிடர் காலத்தில் வணிகர்கள் மீது போடப்பட்ட வழக்குகளை திரும்ப பெறவேண்டும்; விக்கிரமராஜா வலியுறுத்தல்
கொரோனாவால் வணிகர்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா மாவட்ட வாரியாக வணிகர் சங்க நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை நடத்தி வருகிறார்.
அந்தவகையில், திண்டுக்கல் மாவட்டம் பழனியில் ஏ.எம்.விக்கிரமராஜா தலைமையில் நேற்று கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-
* கொரோனா பேரிடர் காலத்தில், பேரிடர் கால சட்டங்களை சுட்டிக்காட்டி பல்வேறு வழக்குகள் வணிகர்கள் மீது திணிக்கப்பட்டுள்ளன. இந்த வழக்குகளை தமிழக அரசு எந்தவித நிபந்தனையும் இன்றி விலக்கி கொள்ளவேண்டும். அபராதத்தொகை விதிப்பை ரத்து செய்யவேண்டும்.
* கோயம்பேடு பூ மார்க்கெட் திறப்பு தொடர்பாக 18-ந்தேதி (இன்று) சிறப்பு ஆலோசனை கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
* கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த வணிகர்களின் குடும்பங்களுக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்கவேண்டும்.
* சென்னை-மதுரை ‘தேஜஸ்’ ரெயில் திண்டுக்கலில் நின்று செல்ல மத்திய ரெயில்வே அமைச்சகம் நடவடிக்கை எடுக்கவேண்டும்.
மேற்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.