மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் மழை: நிரம்பும் நிலையில் பாபநாசம் அணை

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்து வரும் மழை காரணமாக பாபநாசம் அணை நிரம்பும் தருவாயில் உள்ளது.

Update: 2020-12-18 00:18 GMT
நெல்லை, 

நெல்லை, தென்காசி மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக வடகிழக்கு பருவமழை பரவலாக பெய்து வருகிறது. நெல்லை மாநகர பகுதியில் நேற்று காலையில் சாரல் மழை பெய்தது. பின்னர் வெயில் அடித்தது. மாலையில் மேகமூட்டமாக இருந்தது.

பாபநாசம், மணிமுத்தாறு பகுதியில் காலையில் பலத்த மழை பெய்தது. மாலையில் சாரல் மழை பெய்தது. அம்பை, செங்கோட்டை, புளியரை பகுதியிலும் பலத்த மழை பெய்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியது.

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியிலும் பெய்த மழையால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. பாபநாசம், ராமநதி, கடனாநதி உள்ளிட்ட அணைப்பகுதியிலும் மழை பெய்தது. 143 அடி கொள்ளளவு கொண்ட பாபநாசம் அணையின் நீர்மட்டம் நேற்று 141.20 அடியாக இருந்தது. அந்த அணை விரைவில் நிரம்பும் தருவாயில் உள்ளது.

அணைக்கு வினாடிக்கு 1,504 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணை நிரம்புவதற்கு 1.80 அடி நீர்மட்டம் தண்ணீரே தேவைப்படுகிறது. எனவே அணையின் பாதுகாப்பு கருதி அணைக்கு வருகிற தண்ணீரை மறுகால் வழியாக திறந்துவிட பொதுப்பணித்துறை அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.

156 அடி கொள்ளளவு கொண்ட சேர்வலாறு அணையின் நீர்மட்டம் 148.46 அடியாகவும், மணிமுத்தாறு அணை நீர்மட்டம் 105.50 அடியாகவும் உள்ளது. வடக்கு பச்சையாறு அணை நீர்மட்டம் 25 அடியாகவும், நம்பியாறு அணை நீர்மட்டம் 10.62 அடியாகவும், கொடுமுடியாறு அணை நீர்மட்டம் 27 அடியாகவும், கடனாநதி அணை நீர்மட்டம் 83.50 அடியாகவும், ராமநதி அணை நீர்மட்டம் 79 அடியாகவும், கருப்பாநதி அணை நீர்மட்டம் 66.44 அடியாகவும், அடவிநயினார் அணை நீர்மட்டம் 88 அடியாகவும் உள்ளது.

நெல்லை, தென்காசி மாவட்டங்களில் நேற்று காலை 8 மணி நிலவரப்படி முடிவடைந்த 24 மணி நேரத்தில் பெய்த மழை அளவு விவரம் (மில்லிமீட்டரில்) வருமாறு:-

பாபநாசம்-3, சேர்வலாறு-5, மணிமுத்தாறு-3, நம்பியாறு-2, அம்பை-3, சேரன்மாதேவி-2, நாங்குநேரி-3, பாளையங்கோட்டை-6, நெல்லை-5, தென்காசி-3, கருப்பாநதி-2, கடனாநதி-2, ராமநதி-2, செங்கோட்டை-2, குண்டாறு-7.

மேலும் செய்திகள்