ஊத்துக்கோட்டை ஆரணி ஆற்றில் தண்ணீர் வடியாததால் பொதுமக்கள் அவதி
ஊத்துக்கோட்டை ஆரணி ஆற்றில் தண்ணீர் வடியாததால் பொதுமக்கள் அவதிக்குள்ளானார்கள்.;
உபரிநீர் திறப்பு
நிவர் புயல் காரணமாக ஊத்துக்கோட்டை சுற்று வட்டார பகுதிகள் மற்றும் ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் பலத்த மழை பெய்தது. இதனால் பிச்சாட்டூரில் உள்ள ஆரணியார் அணை முழுவதுமாக நிரம்பியது. இதனை தொடர்ந்து கடந்த மாதம் 25-ந் தேதி உபரி நீர் ஆரணி ஆற்றில் திறந்து விடப்பட்டது. ஆரம்பத்தில் வினாடிக்கு 5 ஆயிரம் கன அடி வீதம் திறந்து விடப்பட்ட தண்ணீர் பிறகு 10, 11 ஆயிரம் கனஅடியாக தண்ணீர் வெளியேற்றப்பட்டது.
இதன் காரணமாக ஊத்துக்கோட்டை ஆரணி ஆற்றின் குறுக்கே உள்ள தரைப்பாலம் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது. இதனை தொடர்ந்து தரைப்பாலம் வழியாக வாகன போக்குவரத்து ரத்து செய்யப்பட்டது.
பொதுமக்கள் அவதி
இதனால் ஊத்துக்கோட்டையில் இருந்து திருவள்ளூர் மற்றும் இதர பகுதிகளுக்கு செல்வோர் தண்டலம், ஏனம்பாக்கம், கல்பட்டு, சீதஞ்செரி, ஓதப்பை வழியாக மாற்றுப்பாதையில் 50 கிலோ மீட்டர் கூடுதல் தூரம் பயணிக்க வேண்டிய நிலை நிலவி வருகிறது. இதனால் தரை பாலத்துக்கு தெற்கு திசையில் உள்ள போந்தவாக்கம், பேரிட்டிவாக்கம், மாம்பாக்கம், வேலகாபுரம், பெரிஞ்சேரி, கச்சூர், சீத்தஞ்சேரி, நந்திமங்கலம், மேலகரமன்னூர் உள்பட்ட 30 கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் ஆற்றை கடக்க முடியாமல் அவதிக்குள்ளானார்கள். இவர்கள் அத்தியாவசிய பொருட்கள் வாங்க வேண்டும் என்றால் ஊத்துக்கோட்டைக்கு தான் வர வேண்டி உள்ளது.
இந்த நிலையில் அடித்து செல்லப்பட்ட தரைப்பாலம் அருகே ரூ.28 கோடி செலவில் கட்டப்பட்டு வரும் மேம்பாலம் மீது தற்காலிகமாக அமைக்கப்பட்ட படிகள் மூலம் இந்த கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் கடந்த 20 நாட்களாக சென்று வருகின்றனர்.
இந்த நிலையில் மழை முற்றிலுமாக நின்று விட்ட பிறகும் பிச்சாட்டூர் அணை அருகே உள்ள காட்டில் உள்ள ஓடைகளின் நீர்வரத்து தொடர்ந்து கொண்டிருப்பதால் உபரி நீர் ஆரணி ஆற்றில் இருந்து தொடர்ந்து வெளியேற்றப்படுகிறது. இதனால் ஆரணி ஆற்று தரைப்பாலத்தில் வெள்ளம் வடியவில்லை. இதனால் பொது மக்கள் பாலத்தின் இருபுறங்களிலும் உள்ள சுமார் 40 அடி உயரம் உள்ள படிகள் மேலே ஏறி 600 மீட்டர் நீளமுள்ள பாலத்தை கடந்து தான் சென்று வருகின்றனர். படிகளில் ஏற முடியாமல் முதியவர்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.
வெள்ளம் வடிந்த பிறகுதான்
ஆரணி ஆற்றில் வெள்ளம் முழுவதுமாக வடிந்த பிறகுதான் தரைப்பாலத்தில் அடித்து செல்லப்பட்ட பகுதியை சீரமைக்க முடியும் என்று அதிகாரிகள் திட்டவட்டமாக தெரிவித்துவிட்டனர். ஆரணி ஆற்றில் வெள்ளம் வடியாததால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி உள்ளனர்.