கடலூரில் 3-வது நாளாக நெற்பயிர்களுடன் விவசாய சங்கத்தினர் காத்திருப்பு போராட்டம் - 85 பேர் கைது
கடலூரில் 3-வது நாளாக விவசாய சங்கத்தினர் நேற்று நெற்பயிர்களுடன் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுதொடர்பாக 85 பேரை போலீசார் கைது செய்தனர்.
கடலூர்,
மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 புதிய வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தியும், டெல்லியில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளுக்கு ஆதரவாகவும், மத்திய அரசை கண்டித்தும் விவசாய சங்கத்தினர் 14-ந் தேதி முதல் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபடுவோம் என அறிவித்து இருந்தனர். அதன்படி கடலூரில் கடந்த 14-ந் தேதி முதல் விவசாய சங்கத்தினர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுதொடர்பாக முதல் நாளில் 72 பேரையும், நேற்று முன்தினம் 10 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
இந்த நிலையில் நேற்று 3-வது நாளாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபடுவதற்காக விவசாய சங்க மாவட்ட செயலாளர் வி.எம்.சேகர், விவசாய சங்க மாவட்ட தலைவர் ரவிச்சந்திரன், பொருளாளர் தட்சிணாமூர்த்தி மற்றும் இவர்களுக்கு ஆதரவாக மாதர் சங்கத்தினர் கடலூர் மஞ்சக்குப்பத்தில் ஒன்று திரண்டனர்.
இதனால் அசம்பாவிதம் ஏதும் நடைபெறாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக புதுநகர் இன்ஸ்பெக்டர் உதயகுமார் தலைமையில் 200-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டனர். இதையடுத்து காலை 11 மணி அளவில் விவசாய சங்கத்தினர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.
இதையடுத்து அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட 70 பேரை கைது செய்து, மஞ்சக்குப்பத்தில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.
அதன் பிறகு சிறிது நேரத்தில் காவிரி டெல்டா பாசன விவசாயிகள் சங்க தலைவர் இளங்கீரன் தலைமையில் கடலூர் தெற்கு மாவட்ட ம.தி.மு.க. செயலாளர் ஏ.என்.குணசேகரன், மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் கந்தசாமி, தலைமை கழக பேச்சாளர் ராஜாராமன் மற்றும் விவசாய சங்கத்தினர் காதில் பூ வைத்துக் கொண்டு அதே இடத்தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். உடனே போராட்டத்தில் ஈடுபட்ட 15 பேரை போலீசார் கைது செய்து, அவர்களையும் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். அடுத்தடுத்து நடந்த இந்த போராட்டங்களால் மஞ்சக்குப்பம் பகுதி நேற்று பரபரப்புடன் காணப்பட்டது.