கொரோனாவுக்கு மூதாட்டி பலி - 12 பேருக்கு பாதிப்பு உறுதி
கடலூர் மாவட்டத்தில் கொரோனாவுக்கு மூதாட்டி பலியானார். புதிதாக 12 பேருக்கு பாதிப்பு உறுதியானது.
கடலூர்,
கடலூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 24 ஆயிரத்து 454 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டிருந்தது. இந்நிலையில், நேற்று பரிசோதனை முடிவுகள் வெளியான நிலையில் புதிதாக 12 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இவர்களில், பண்ருட்டியை சேர்ந்த பிரசவித்த தாய், சளி, காய்ச்சல், இருமல் போன்ற நோய்த்தொற்று அறிகுறிகளுடன் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டிருந்த 3 பேர், கொரோனா பாதித்தவர்களுடன் தொடர்பில் இருந்த 8 பேருக்கும் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனால், மாவட்டத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 24 ஆயிரத்து 466 ஆக உயர்ந்தது. நேற்று முன்தினம் வரை 24 ஆயிரத்து 89 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். நேற்று ஒரே நாளில் 11 பேர் குணமடைந்து வீடுகளுக்கு சென்றனர். இது வரை, 278 பேர் உயிரிழந்த நிலையில் நேற்று மூதாட்டி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
இதன் விவரம் வருமாறு:-
நெய்வேலியை சேர்ந்த 77 வயது மூதாட்டி சளி, காய்ச்சல், இருமல் போன்ற நோய்த்தொற்று அறிகுறிகளுடன் சென்னையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அவருக்கு, உமிழ்நீர் எடுத்து பரிசோதனை செய்ததில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இருப்பினும் அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதன் மூலம் சாவு எண்ணிக்கை 279 ஆக உயர்ந்தது.
கொரோனா பாதித்த 56 பேர் கடலூர் மாவட்ட மருத்துவமனைகளிலும், 31 பேர் வெளி மாவட்ட அரசு, தனியார் மருத்துவமனைகளிலும் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். 591 பேரின் பரிசோதனை முடிவுகள் வரவேண்டியுள்ளது.