கள்ளக்குறிச்சியில், வைர வியாபாரம் செய்வதாக கூறி பெண்ணிடம் ரூ.1¾ கோடி மோசடி - 3 பேர் கைது
கள்ளக்குறிச்சியில் வைர வியாபாரம் செய்வதாக கூறி பெண்ணிடம் ரூ.1¾ கோடி மோசடி செய்த 3 பேரை போலீசார் கைது செய்தனர். இது பற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
விழுப்புரம்,
கள்ளக்குறிச்சி துருகம்ரோடு எம்.ஆர்.என். நகரைச்சேர்ந்தவர் மணி மகள் அருட்செல்வி(வயது 36). இவரிடம் அதே பகுதியை சேர்ந்த செந்தில் என்பவர் அணுகி, நானும், விழுப்புரத்தை சேர்ந்த ஜாகீர் என்கிற தீன்பாய் என்பவரும் சேர்ந்து பெரிய அளவில் ராசிக்கல் மற்றும் வைர வியாபாரம் செய்து வருகிறோம். தற்போது எங்களுக்கு பணம் தேவைப்படுகிறது. அந்த பணத்தை நீங்கள் கொடுத்தால் 2 மாதத்தில் இரட்டிப்பாக்கி உங்களுக்கு தருகிறோம் என்று ஆசைவார்த்தை கூறினர்.
மேலும் வெளிநாடுகளில் உள்ள பல்வேறு நிறுவனங்களில் நாங்களும், நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் பெருமாள்பட்டி வரகுணராமபுரம் கிராமத்தை சேர்ந்த முருகன் என்கிற காளிராஜ் என்பவரும் முகவராகவும் செயல்பட்டு வருகிறோம். நீங்களும் பணம் கொடுத்தால் விரைவில் கோடீஸ்வரர் ஆகி விடலாம் என்று அவரை நம்ப வைத்தனர்.
இதை உண்மை என்று நம்பிய அருட்செல்வி, ஜாகீர் வீட்டிற்கு சென்று முதல் தவணையாக ரூ.7 லட்சம் கொடுத்துள்ளார். பின்னர் நகைகளை அடகு வைத்து மேலும் ரூ.20 லட்சம் கொடுத்துள்ளார். இதையடுத்து அருட்செல்வியின் தந்தை மணி, அவரது உறவினர் சுமதி, ராமதாஸ் ஆகியோரும் தனித்தனியே அவர்களை சந்தித்து பணம் கொடுத்துள்ளனர். மொத்தம் ரூ.1 கோடியே 75 லட்சத்தை செந்தில், முருகன், ஜாகீர் ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.
ஆனால் பணம் வாங்கி நீண்ட நாட்கள் ஆகியும் அவர்கள் பணம் கொடுக்கவில்லை. இதனால் சந்தேகமடைந்த அருட்செல்வி தாங்கள் கொடுத்த ரூ.1 கோடியே 75 லட்சத்தை திருப்பி கேட்டார். ஆனால் அவர்கள் பணத்தை கொடுக்காமல் காலம் தாழ்த்தி வந்தனர். அதன்பிறகு தான் அவர்கள் தன்னை ஏமாற்றி பணத்தை மோசடி செய்தது தெரிந்தது.
இது குறித்து அவர்களிடம் அருட்செல்வி கேட்ட போது, அவருக்கு 3 பேரும் சேர்ந்து கொலை மிரட்டல் விடுத்தனர். இதனால் பாதிக்கப்பட்ட அவர் இது தொடர்பாக விழுப்புரம் மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து முருகன், செந்தில், ஜாகீர் ஆகிய 3 பேரையும் கைது செய்தனர். தொடர்ந்து அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.