கெங்கவல்லி அருகே, மண் கடத்திய டிராக்டர் மீது மோட்டார்சைக்கிள் மோதல் - வாலிபர் பலி; 2 நண்பர்கள் படுகாயம்

கெங்கவல்லி அருகே, மண் கடத்திய டிராக்டர் மீது மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் வாலிபர் பலியானார். நண்பர்கள் 2 பேர் படுகாயம் அடைந்தனர்.

Update: 2020-12-17 13:02 GMT
கெங்கவல்லி,

சேலம் மாவட்டம் கெங்கவல்லி குறும்பர் தெருவை சேர்ந்தவர்கள் ஹாரிஸ் (வயது 24), ரியாஸ் அகமது (26). வாழப்பாடியை சேர்ந்தவர் கண்ணன் (25). நண்பர்களான இவர்கள் 3 பேரும் டிரைவர்கள். நேற்று இவர்கள் 3 பேரும் ஒரு மோட்டார் சைக்கிளில் தம்மம்பட்டி நோக்கி சென்று கொண்டிருந்தனர். மோட்டார் சைக்கிளை ஹாரிஸ் ஓட்டினார். கெங்கவல்லி அருகே உள்ள 74-கிருஷ்ணாபுரம் காந்திநகர் பகுதியில் சென்றபோது, எதிரே கிராவல் மண் ஏற்றிக்கொண்டு டிராக்டர் ஒன்று வந்தது. திடீரென அந்த டிராக்டர் வளைவில் திரும்பியது.

இதில் நிலைதடுமாறிய மோட்டார் சைக்கிள் எதிர்பாராதவிதமாக டிராக்டர் மீது மோதியது. இந்த விபத்தில் ஹாரிஸ் சம்பவ இடத்திலேயே பலியானார். ரியாஸ் அகமது, கண்ணன் ஆகியோர் படுகாயம் அடைந்தனர். இவர்களை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு சிகிச்சைக்காக ஆத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

விபத்து குறித்து தகவல் அறிந்த கெங்கவல்லி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முருகேசன் மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்று டிராக்டர் டிரைவர் செந்திலை பிடித்து விசாரித்தனர். அப்போது டிராக்டரில் கிராவல் மண் கடத்தி வரப்பட்டது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து வழக்குப்பதிவு செய்து போலீசார், செந்திலை கைது செய்தனர்.

மேலும், டிராக்டர் உரிமையாளர் ரமேஷ் மீது வழக்குப்பதிவு செய்து அவரை தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்