ஈரோட்டில் 3-வது நாளாக வருமானவரி சோதனை: மேலும் ரூ.4 கோடி-முக்கிய ஆவணங்கள் சிக்கின

ஈரோட்டில் பிரபல கட்டுமான நிறுவனத்தில் 3-வது நாளாக நடந்த வருமான வரி சோதனையில் மேலும் ரூ.4 கோடியும், முக்கிய ஆவணங்களும் சிக்கின.

Update: 2020-12-17 06:01 GMT
ஈரோடு, 

‘ஸ்ரீபதி அசோசியேட்ஸ்’ என்ற பிரபல கட்டுமான நிறுவனத்தின் அலுவலகம் ஈரோடு காளைமாட்டுசிலை அருகில் தங்கபெருமாள் வீதியில் உள்ளது. இந்த அலுவலகத்தில் கடந்த 14-ந் தேதி வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையை தொடங்கினார்கள். இந்த சோதனை 3-வது நாளாக நேற்றும் நடந்தது.

சோதனை நடத்தப்படும் நிறுவனத்துக்கு சொந்தமாக பஸ்கள் ஓடுகிறது. மேலும், மசாலா பொருட்கள் உற்பத்தி, கல்குவாரி, கட்டுமான பொருட்கள் தயாரிப்பு, திருமண மண்டபம் உள்ளிட்ட தொழில்களும் நடத்தப்படுகிறது. ஈரோடு, கஸ்பாபேட்டை, முள்ளாம்பரப்பு போன்ற பகுதிகளில் உள்ள அலுவலகங்கள், உரிமையாளரின் வீடு என சுமார் 15 இடங்களில் வருமான வரி சோதனை நடத்தப்பட்டது.

ரூ.4 கோடி

வருமான வரி சோதனை நடந்த பகுதிகளில் துப்பாக்கி ஏந்திய பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. அங்கு அதிகாரிகள் இரவு, பகலாக வந்து சென்ற வண்ணமாக இருந்ததால் பரபரப்பாக காணப்பட்டது. ஏற்கனவே 2 நாட்களாக நடந்த சோதனையில் ரூ.16 கோடி கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று நடந்த சோதனையில் மேலும் ரூ.4 கோடி சிக்கியதாக கூறப்படுகிறது. மேலும், முக்கிய ஆவணங்களை வருமான வரித்துறை அதிகாரிகள் கைப்பற்றி உள்ளார்கள். பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்களை அதிகாரிகள் அலுவலகத்துக்கு எடுத்து சென்றார்கள். இதுதொடர்பாக அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

ஈரோட்டில் தொடர்ந்து 3 நாட்களாக வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்