ரத்தினகிரி அருகே விபத்தில் கல்லூரி மாணவர் பரிதாப சாவு; 3 பேர் காயம்; ‘டயர்’ வெடித்து ரோட்டில் உருண்ட கார் மீது லாரி மோதியது

ரத்தினகிரி அருகே டயர் வெடித்து ரோட்டில் உருண்ட கார் மீது லாரி மோதியதில் கல்லூரி மாணவர் பலியானார். மேலும் 3 மாணவர்கள் காயமடைந்தனர்.;

Update: 2020-12-17 05:35 GMT
யூசுப்
கார் மீது லாரி மோதியது
வேலூர் மாவட்டம் சத்துவாச்சாரியைச் சேர்ந்தவர்கள் யூசுப் (வயது 18), கோபால் (20), லோகேஷ் (18), நரேன் (18). இவர்கள் 4 பேரும் ராணிப்பேட்டை மாவட்டம் மேல்விஷாரம் பகுதியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் இளநிலை 2-ம் ஆண்டு படித்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று மதியம் 4 பேரும் காரில் சத்துவாச்சாரியில் இருந்து மேல்விஷாரம் கல்லூரிக்கு வந்துள்ளனர். கோபால் என்பவர் காரை ஓட்டி வந்துள்ளார்.

ரத்தனகிரியை அடுத்த அரப்பாக்கம் தேசிய நெடுஞ்சாலையில் வரும்போது காரின் முன்பக்க டயர் வெடித்து நிலைதடுமாறி தடுப்பு சுவர் மீது மோதி சாலையில் கார் உருண்டு உள்ளது. அப்போது ஆற்காட்டில் இருந்து வேலூர் நோக்கி வந்த லாரி, கார் மீது மோதியது.

கல்லூரி மாணவர் பலி
இதில் காரின் முன்பகுதியில் அமர்ந்திருந்த யூசுப் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு காரில் அமர்ந்த நிலையிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மற்ற 3 பேரும் காயங்களுடன் உயிர் தப்பினர்.

அவர்களை அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக வேலூர் தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும் இதுகுறித்து தகவல் அறிந்த ரத்தினகிரி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று யூசுப் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்