கழிவுநீர் கால்வாய் அமைக்க முயன்ற தனியார் நிறுவனம் பொதுமக்கள் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு
சிறுபூலுவப்பட்டி அருகே உரிய அனுமதி பெறாமல் கழிவுநீர் கால்வாய் அமைக்க முயன்ற தனியார் நிறுவனத்திற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் கால்வாய் அமைக்கும் பணி நிறுத்தப்பட்ட தால் பரபரப்பு ஏற்பட்டது.;
அனுப்பர்பாளையம்,
திருப்பூர் மாநகராட்சி 14-வது வார்டு சிறுபூலுவப்பட்டியை அடுத்த அமர்ஜோதி கார்டன் பகுதியில் வாரியர் கிளாத்திங் என்ற பனியன் ஏற்றுமதி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. அந்த நிறுவனத்தின் கழிவுநீரை கால்வாய் அமைத்து ஜவஹர்நகர் பகுதியில் உள்ள சாக்கடை கால்வாயில் இணைக்கும் வகையில் சம்பந்தப்பட்ட நிறுவனம் சார்பில் கால்வாய் அமைக்கும் பணி பொக்லைன் மூலமாக கடந்த 2 நாட்களாக நடைபெற்று வந்தது. இதற்கு ஜவஹர்நகர் பகுதி பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.
இந்த நிலையில் நேற்று அந்த பகுதியை சேர்ந்த பெண்கள் உள்ளிட்ட பொதுமக்கள் மற்றும் ஜவஹர்நகர் குடியிருப்போர் நல சங்க நிர்வாகிகள் கால்வாய் அமைக்கும் பணி நடைபெற்ற இடத்தில் திரண்டனர். மேலும் பனியன் நிறுவனம் உரிய அனுமதி பெறாமல் அந்த பணியை மேற்கொள்வதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் அங்கு தோண்டப்பட்ட குழிகள் மூடப்பட்டு, பணிகள் பாதியில் நிறுத்தப்பட்டது.
நடவடிக்கை எடுக்க வேண்டும்
இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது:-
ஜவஹர்நகர் பகுதியில் 150-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். எங்கள் பகுதியில் ஏற்கனவே கழிவுநீர் செல்ல முடியாமல் சாக்கடை கால்வாய் நிரம்பி காணப்படுகிறது. இந்த நிலையில் தற்போது பனியன் நிறுவனத்தில் இருந்து வெளியேறும் கழிவுநீரை கால்வாய் மூலமாக எங்கள் பகுதியில் வந்து இணைத்தால் சாக்கடை கால்வாய் நிரம்பி கழிவுநீர் வெளியேறி குடியிருப்புகளுக்குள் புகும் நிலை ஏற்படும். இதனால் சுகாதார சீர்கேடு ஏற்படும் அபாயமும் உள்ளது. இதுதொடர்பாக பொதுமக்கள் சார்பில் ஏற்கனவே மாவட்ட கலெக்டரிடம் மனு வழங்கப்பட்டு, முதல்முறை பணிகள் தடுத்து நிறுத்தப்பட்டது. தற்போது 2-வது முறையாக கால்வாய் அமைக்கும் பணியை மேற்கொள்ளும் நிறுவனம் மாநகராட்சி மற்றும் நெடுஞ்சாலைத் துறையிடம் உரிய அனுமதி பெறவில்லை.
எனவே இப்பகுதி மக்களின் கோரிக்கையை ஏற்று தனியார் நிறுவனம் அமைக்கும் கால்வாய் பணியை உடனடியாக அதிகாரிகள் தடுத்து நிறுத்த வேண்டும். மேலும் உரிய அனுமதி பெறாமல் பணியை மேற்கொண்ட அந்த நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு பொதுமக்கள் தெரிவித்தனர். இந்த சம்பவம் காரணமாக அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.