தமிழக-ஆந்திர மாநிலங்களை இணைக்கும் பொன்னை ஆற்றுப்பால தூண் இடிந்து சேதம்; போக்குவரத்துக்கு தடை
தமிழக-ஆந்திர மாநிலங்களை இணைக்கும் பொன்னை ஆற்றுப்பாலம் வெள்ளப்பெருக்கு காரணமாக சேதமடைந்தது. இதனால் அந்த வழியாக போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
பொன்னை ஆற்றில் வெள்ளப்பெருக்கு
வேலூர் மாவட்டம், பொன்னை அருகே பொன்னையாறு ஓடுகிறது. இந்த பொன்னைஆற்றைக் கடப்பதற்கு பொன்னை- சித்தூர் சாலையில் மேம்பாலம் அமைக்கப்பட்டுள்ளது. பாலம் அமைத்து சுமார் 50 வருடங்கள் ஆகியிருக்கும் என்று கூறப்படுகிறது. இந்த பாலத்தின் வழியாகத்தான் சித்தூரில் இருந்து பொன்னை வழியாக சோளிங்கர் உள்ளிட்ட பகுதிகளுக்கு பொதுமக்கள் சென்று வருகிறார்கள்.
குறிப்பாக தமிழகம்-ஆந்திர மாநிலத்தை இணைக்கும் முக்கியமான பாலம் ஆகும்.
இந்த பாலத்தின் வழியாக பஸ்கள், லாரிகள், கார்கள், இருசக்கர வாகனங்கள் உள்ளிட்ட வாகன போக்குவரத்து நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் நிவர் புயல் மழையால் பொன்னை ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. மேலும் ஆந்திர மாநிலம் கலவகுண்டா அணையில் இருந்து திறந்துவிடப்படும் தண்ணீரும் பொன்னையாற்றில் சேர்ந்து வருவதால், ஆற்றில் வெள்ளத்தின் வேகம் அதிகரித்து செல்கிறது.
தூண் இடிந்து சேதம்
இந்த நிலையில் 36 கண்களை கொண்ட பொன்னையாற்றின் மத்தியில் பாலத்தை தாங்கி பிடிக்கும் தூண் ஒன்று சேதம் அடைந்து இடிந்தது கண்டறியப்பட்டது. இதனால் பாலமும் இடிந்து விழுமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து நேற்று நெடுஞ்சாலை துறை உதவி கோட்ட பொறியாளர் சுகந்தி மற்றும் அதிகாரிகள், போலீசார் உள்ளிட்டோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பாலத்தினை நேரில் ஆய்வு செய்தனர்.
முதற்கட்டமாக இந்த பாலத்தின் வழியாக 4 சக்கர வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டு, சாலையின் குறுக்கே தடுப்புகள் அமைக்கப்பட்டது. வாகனங்கள் அனைத்தும் மேல்பாடி வழியாக சுற்றி செல்லுமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. மேலும் பழுதடைந்த தரைப்பாலத்தை அகற்றிவிட்டு புதிய பாலம் அமைக்க அரசுக்கு பரிந்துரை செய்துள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேலும் சேதமடைந்த பாலத்தை வேலூர் மாநகர அ.தி.மு.க. செயலாளர் எஸ்.ஆர்.கே.அப்பு, காட்பாடி கிழக்கு ஒன்றிய செயலாளர் சோமநாதபுரம் சின்னதுரை உள்ளிட்ட அ.தி.மு.க. நிர்வாகிகளும் நேரில் சென்று பார்த்தனர்.
பொன்னை ஆற்றுப்பாலம் சேதமடைந்துள்ளது இப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் அனைத்து 4 சக்கர வாகனங்களும் மேல்பாடி வழியாக சுற்றிக்கொண்டு செல்வதால் பொதுமக்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தி உள்ளது.