மக்கள் நீதி மய்யம் ஆட்சியில் இல்லத்தரசிகளுக்கு ஊதியம் வழங்கப்படும் நாகர்கோவிலில் கமல்ஹாசன் பேச்சு
மக்கள் நீதி மய்யம் ஆட்சியில், இல்லத்தரசிகளுக்கு ஊதியம் வழங்கப்படும் என நாகர்கோவிலில் கமல்ஹாசன் கூறினார்.
நாகர்கோவில்,
தமிழக சட்டசபை தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில் பல்வேறு அரசியல் கட்சிகள் தங்கள் பிரசாரத்தை தொடங்கிவிட்டன. அந்த வரிசையில், மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தனது முதல்கட்ட தேர்தல் பிரசாரத்தை மதுரையில் கடந்த 13-ந் தேதி தொடங்கினார்.
“தமிழகத்தை சீரமைப்போம்’’ என்ற முழக்கத்துடன் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். மதுரையை தொடர்ந்து தேனி, திண்டுக்கல் மற்றும் நெல்லை ஆகிய மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட அவர் நேற்று குமரி மாவட்டத்துக்கு வந்தார். பின்னர் நாகர்கோவில் ஆசாரிபள்ளத்தில் உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் கட்சி நிர்வாகிகளுடன் கலந்துரையாடினார்.
அப்போது கமல்ஹாசன் பேசியதாவது:-
தேர்தல் நெருங்கி வருவதால் நாகர்கோவிலுக்கு கமல் வருகிறார் என பலரும் நினைக்கலாம். நான் கோடை விடுமுறையில் டி.கே.எஸ். குழுவை ேசர்ந்த அவ்வை சண்முகம் வீட்டுக்கு வந்திருக்கிறேன். எனக்கு நடிப்பு சொல்லிக்கொடுத்த ஆசிரியர் அவர்தான். இங்கே நான் நடிப்பு பயிற்சி பெற்றிருக்கிறேன்.
எம்.ஜி.ஆரின் கொள்கைகளை நிறைவேற்ற...
மக்கள் நீதி மய்யம் தொடங்க காரணம் தனிப்பட்ட மனிதனின் கோபத்தின் வெளிப்பாடு. எனது படங்கள் வாயிலாக நாட்டில் உள்ள குறைகள் மற்றும் ஊழல்கள் ஆகியவற்றை மக்களுக்கு வெளிப்படுத்தி உள்ளேன். அரசியலை பற்றி எம்.ஜி.ஆர். இருக்கும்போது ஏன் பேசவில்லை, ஏன் வரவில்லை என கேட்கிறார்கள். அப்போது வரவேண்டிய தேவை இல்லை. இப்போது அவர் இல்லை என்று இயற்கை சொல்கிறது. ஆனால் அவர் இல்லவே இல்லை என்று சிலர் சொல்கிறார்கள்.
இதுவரை எடுக்காத எம்.ஜி.ஆர்.- ஐ ஏன் கையில் எடுக்கிறீர்கள் என கேட்கிறார்கள். நான் எடுக்கவில்லை அவர்தான் என்னை சிறுவயதில் கையில் எடுத்தார். இப்போது அவரது கொள்கைகளை நான் கையில் எடுத்து, நிறைவேற்ற விருப்புகிறேன்.
நான் முதலில் நேர்மையாக இருக்க முடிவு எடுத்தேன். அதன்படி நடக்கிறேன். அவர்களோ நேர்மையானவர்கள் என பொய் சொல்கிறார்கள் என்பது அவர்களது செயல்பாட்டில் தெரிகிறது. அவர்கள் கும்பிடும் தெய்வம் காசு மட்டும்தான். நாங்கள் கும்பிடுவது மக்களை, நாங்கள் பின்பற்றுவது மக்களை.
தமிழகத்தைதலை நிமிரச்செய்வது
அரசியலில் காசுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் நல்லாட்சியை வழங்கிய கக்கன், காமராஜர் போன்றவர்கள் ஆண்ட தமிழகம் இது. அவர்களை மதிக்காத சோம்பேறிகள் கூட்டத்தில் நான் சேரமாட்டேன்.
மக்கள் நீதி மய்யம் நல்ல ஒரு பயணத்தை தொடங்கி நேர் வழியில் சென்றுகொண்டிருக்கிறது. நேர்மையான ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்கு எடுத்துக்காட்டான சகாயம், சந்தோஷ்பாபு போன்றவர்களையும் வேலை செய்யவிடாமல் இடையூறு செய்துள்ளனர்.
கட்சி ஆரம்பித்து மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற தன்னம்பிக்கை நீங்கள் கொடுத்தது. நடிகனாக இருக்கும் போது கிடைத்த அன்பை விட, அரசியலில் கால்பதித்து மக்களை சந்திக்கும் போது கிடைத்த அன்பு அதிகம்.
இதற்கு கைமாறாக என் கடமையை நான் செய்ய வேண்டும். என் கடமை தமிழகத்தை தலை நிமிரச்செய்வதும், சீரமைப்பதும்தான். மக்களுக்கான எனது கடமையை செய்ய விடுங்கள்.
நடுநிலை கொள்கை
நாம் ஆட்சியில் அமர்ந்துவிட்டால் எல்லாம் சரியாகிவிடும். நாம் அங்கு போகும்போது என்ன அவலட்சணத்தில் இருக்கப்போகிறது என்று பயமாக இருக்கிறது. மக்களை சுரண்டுபவர்கள் கஜானாவை விட்டு வைத்திருப்பார்களா?.
இரு கட்சியினரும் ஒருவரை ஒருவர் குற்றங்களை சொல்லிக்கொண்டு இருக்கிறார்கள். இதனால் என் வேலைச்சுமையை அவர்களே குறைத்துள்ளனர்.
நடுநிைல (சென்டரிசம்) என்னும் எனது கொள்கையை வெளிநாட்டில் இருந்து வந்தது என கூறுகிறார்கள். கம்யூனிசம் என்பது வெளிநாட்டில் இருந்து வந்ததுதான். பைபிள் மற்றும் குரான் ஆகியவை இன்று உலக மொழிகளில் மொழிபெயர்ப்பு செய்யப்படவில்லையா?. பாரதி சொன்னதை ரஷ்ய மொழியில் மொழிபெயர்க்கவில்லையா?.
டெல்லியில் இருந்து சிறந்த மாநிலமாக தமிழகத்தை அறிவித்துள்ளனர். ஆனால் தமிழகத்தின் போட்டியாக பீகாரையும், உத்தரபிரதேசத்தையும் வைத்து வெளியிட்டது ஏற்புடையது அல்ல.
இல்லத்தரசிகளுக்கு ஊதியம்
மீனவர்கள் சமூகத்தில் அரசியல் பிரதிநிதிகள் உருவாக வேண்டும். மக்கள் நீதி மய்யம் ஆட்சியில் இல்லத்தரசிகளுக்கு ஊதியம் வழங்கப்படும். சிலர் இது சாத்தியம் இல்லை என கூறுவார்கள். இது நமது ஆட்சியில் சாத்தியமாகும்.
எந்த திட்டமாக இருந்தாலும் பொதுமக்கள் பயன்பெற வேண்டும். இவர்கள் கொள்ளை அடிக்காமல் இருந்தால் தமிழகத்தை நாம் காப்பாற்ற முடியும். தண்ணீரை காசுக்கு விற்கும் அரசு நல்ல அரசாகவே இருக்க முடியாது.
மக்கள் ஏழ்மையில் இருந்தால்தான் தேர்தலில் சிலர் கொடுக்கும் பணத்தை அவர்கள் வாங்குவார்கள். ஏழ்மையை அகற்ற வேண்டும் என எம்.ஜி.ஆர். நினைத்தார். ஆனால் இவர்கள் அதை செயல்படுத்தவில்லை. அதை செய்ய வேண்டும் என நான் நினைக்கிறேன். அதை செய்துவிட்டால் எம்.ஜி.ஆரின் வாரிசு நான். பஞ்சம் இல்லாத கொடி நமது ஆட்சியில் அமையும்.
அரசியல் என்ற பெயரில் சிலர் தமிழகத்தை தலைகீழாக மாற்றி உள்ளனர். இதனை நானும் உங்களுடன் சேர்ந்து வேடிக்கை பார்த்து கொண்டிருந்தேன். அதற்கு பிராயசித்தமாக அரசியலுக்கு வந்திருக்கிறேன்.
புது விடியல்
பெட்ரோல் விலை உயர்வால் ஏழை மற்றும் நடுத்தர மக்களின் கதி என்ன?. இப்போது தான் ஊடக வெளிச்சம் மக்கள் நீதி மய்யத்தின் மேல் படத்தொடங்கியுள்ளது. இது புது விடியலாக மாறும். தமிழகம் தலை நிமிரும் என ஒரே நேர்கோட்டில் நில்லுங்கள். தமிழகத்தை சீரமைத்து, சிறந்த நிர்வாகத்தினை அமைக்க மக்கள் நீதி மய்யத்துக்கு வாய்ப்பு கொடுத்தே ஆக வேண்டும். ஊர் கூடி தேர் இழுத்தால் நாளை நமதே.
இவ்வாறு கமல்ஹாசன் பேசினார்.