விவசாயிகளுக்கு ஆதரவாக மார்க்சிஸ்ட் லெனினிஸ்டு கட்சியினர் மறியல்; 21 பேர் கைது
டெல்லியில் போராட்டம் நடத்தும் விவசாயிகளுக்கு ஆதரவாக மார்க்சிஸ்ட் லெனினிஸ்டு (ரெட்ஸ்டார்) கட்சியினர் நேற்று நாகர்கோவிலில் மறியல் போராட்டம் நடத்தினர். இதுதொடர்பாக 21 பேரை போலீசார் கைது செய்தனர்.
நாகர்கோவில்,
டெல்லியில் போராட்டம் நடத்தும் விவசாயிகளின் கோரிக்கையை மத்திய அரசு நிறைவேற்ற வேண்டும். புதிய வேளாண் திருத்த சட்டங்களை திரும்ப பெற வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் லெனினிஸ்டு (ரெட்ஸ்டார்) கட்சி சார்பில் நாகர்கோவிலில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பிருந்து வேப்பமூடு மாநகராட்சி பூங்கா வரை ஊர்வலமாக சென்று ஆர்ப்பாட்டம் நடத்துவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் இதற்கு போலீசார் அனுமதி கொடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.
ஆனாலும் தடையை மீறி திட்டமிட்டபடி போராட்டம் நடத்த கட்சியினர் முடிவு செய்திருந்தனர். அதன்படி நேற்று காலை நாகர்கோவில் கலெக்டர் அலுவலகம் முன்பு மாவட்ட செயலாளர் பால்ராஜ் தலைமையில், மாநகர செயலாளர் மணவை கண்ணன், நிர்வாகிகள் மரியசெல்வன், மேரி ஸ்டெல்லா, லைசட், தனேஷ் உள்பட பலர் திரண்டனர்.
மறியல் போராட்டம்
பின்னர் அவர்கள் டெல்லி விவசாயிகளுக்கு ஆதரவாக கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பியபடி கலெக்டர் அலுவலகம் முன்பு சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட 14 பெண்கள் உள்பட 21 பேரை கைது செய்தனர். அவர்களை போலீஸ் வாகனத்தில் ஏற்றி சென்று ராமன்புதூர் பகுதியில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். மாலையில் அவர்கள் அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர்.